கனடாவில் படுகொலை செய்யப்பட்ட அறுவர்: உறவினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த தனுஷ்க விக்ரமசிங்கவின் அனுமதிக்கு இணங்க, உயிரிழந்த அவரின் மனைவியான தர்ஷனி ஏகநாயக்க மற்றும் அவரது 4 பிள்ளைகளின் இறுதிக் கிரியைகள் பிரேத பரிசோதனையின் பின்னர் பார்ஹேவன் பௌத்த விகாரையினால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இறுதிச்சடங்கு
இறுதிச் சடங்கிற்காக இலங்கையில் இருந்து அவர்களது உறவினர்கள் கனடாவுக்கு வருகைத் தரவுள்ளனர் என்று ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும், கொலையை செய்த பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய சந்தேக நபர், தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தவர் என பார்ஹேவன் விகாரையின் விகாராதிபதி மஹாகம சுனீத தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் உயிர் பிழைத்து பலத்த காயங்களுக்கு உள்ளான தனுஷ்க விக்ரமசிங்க தற்போது இரண்டு சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முடித்த பின்னர் அவரை கவனித்துக் கொள்வதாகவும் ஒட்டாவிலுள்ள ஹில்டா ஜயவர்த்தனாராம விகாரை அறிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *