வாய்ப்பு தராத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் செய்த யுக்தி : சங்கர் – கணேஷ் இசை பிரபலமானது இப்படித்தான்!
இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ்க்கு வாய்ப்பு கொடுப்பதற்காக எம்.ஜி.ஆர் தயாரிப்பாளரிடம் கேட்டபோதும், அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், இறுதியில் எம்.ஜி.ஆர் புதிய யுக்தியை கையாண்டு வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.
இசை உலகில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடி கட்டி பறந்த காலக்கட்டத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சங்கர் கணேஷ். 1967-ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான மகராசி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து அக்கா தங்கை, காலம் வெல்லும், மன்னவன் உள்ளிட்ட படங்களுக்கு இசைமைத்தனர். அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு இசையமைக்க வேண்டும்என்பது இவர்களின் ஆசையாக இருந்தது.
இதன் காரணமாக எம்.ஜி.ஆர் படங்கள் பற்றி பேச்சுக்கள் வரும்போதெல்லாம் அவரை சந்தித்து இருவரும் வாய்ப்பு கேட்டுள்ளனர். அப்போது ஒருநாள், எம்.ஜி.ஆரின் நான் ஏன் பிறந்தேன் என்ற படம் குறித்து அறிவிப்பு வந்தபோது, சங்கர் – கணேஷ் இருவரும் எம்.ஜி.ஆரை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட எம்.ஜி.ஆர், இது குறித்து தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியிடம் பேசியுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான ஜி.என்.வேலுமணி சங்கர் கணேஷ் இசையமைக்க கடைசிவரை ஒப்புக்கொள்வே இல்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர், ஒருநாள் ஜி.என்.வேலுமணியை தனது தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். அப்போது அவருக்கு சில பாடல்களை போட்டு காட்டி பாடல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். பாடலை கேட்ட வேலுமணி பிரமாதமாக இருக்கிறது. எம்.எஸ்.வி இசை சொல்லவா வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் நீங்கள் சொல்வது சரிதான். பாடல் பிரமாதமாக இருக்கிறது. ஆனால் இது எம்.எஸ்.வி இசையமைத்தது அல்ல, இவர்கள் தான் இசையமைத்தார்கள் என்று சொல்லி சங்கர் – கணேஷ் இருவரையும் காட்டியுள்ளார். இப்போது சொல்லுங்கள் இவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கலாமா என்று எம்.ஜி.ஆர் கேட்ட, ஜி.என்.வேலுமணி உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். 1972-ம் ஆண்டு வெளியான நான் ஏன் பிறந்தேன் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதே ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் இதயவீணை படத்திற்கும் சங்கர் – கணேஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன்பே கணேஷை தனது மாப்பிள்ளை என்று அழைக்கும் எம்.ஜி.ஆர் இதயவீனை படத்தின் பேச்சுக்கள் தொடரும்போதே மாப்பிள்ளை இசையமைக்கட்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்