மழை பெய்தால் பணம் திரும்ப கிடைக்கும்… வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்..!
ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வித்தியாசமான திட்டங்களையும் முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். சமீபத்தில் இண்டர்காண்டினெண்டல் சிங்கப்பூர் என்ற ஹோட்டல் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தங்கள் ஹோட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்களின் பயண திட்டங்கள் ஏதாவது மழையால் பாதித்தால், ஒரு இரவு ஹோட்டலில் தங்குவதற்கு உண்டான தொகை அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் வருடத்திற்கு சராசரியாக 171 நாட்கள் மழை பெய்கிறது. இந்நிலையில் விருந்தினர்களை கவர்வதற்காக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டலுக்கு பாராட்டுகள் குவிக்கிறது.
எங்கள் ஹோட்டலின் எதிர்கால திட்டங்கள் குறித்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒருவர், மழை பெய்யாமல் இருந்தாலேபோதும், நமக்கு நன்றாக தொழில் நடக்கும் என நகைச்சுவையாக கூறினார். இதிலிருந்துதான் மழைக்கால இன்சூரன்ஸ் பேக்கேஜ் என்ற திட்டத்தை நடைமுறைபடுத்தலாமே என்ற யோசனை எங்களுக்குள் வந்தது” எனக் கூறுகிறார் இந்த ஹோட்டலின் ஜெனரல் மேனஜர்.
ஹோட்டலில் தங்கும் விருந்தினர்கள் இந்தச் சலுகையை பயன்படுத்த வேண்டுமென்றால், சில விதிமுறைகள் உள்ளது. எப்போது மழை பெய்தாலும் உங்களுக்கு ரீஃபண்ட் தரமாட்டார்கள். பகல் நேரங்களில் குறிப்பிட்ட நான்கு மணி நேரத்திற்குள் மொத்தமாக 120 நிமிடங்கள் மழை பெய்திருந்தால் மட்டுமே உங்கள் தொகை திருப்பி தரப்படும்.
இந்த மழை இன்சூரன்ஸ் பேக்கேஜ் சூட் அறையில் தங்கும் விருந்தினர்களுக்கு மட்டுமே பொறுந்தும். ஜூனியர் சூட் அறையில் தங்கியிருந்தால் ரூ.52,000 தொகையும், இதுவே பிரெசிடென்ஷியல் சூட்டில் தங்கியிருந்தால் ரூ.2.7 லட்சமும் திருப்பி தரப்படும். ஆனால் இந்த தொகை பணமாக கிடைக்காது. அதற்குப் பதிலாக இவர்கள் தரும் வவுச்சரை ஆறு மாதங்களுக்குள் ஹோட்டலில் உள்ள ஏதாவது ஒரு சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் மழை பெய்யும் நாட்களில் சுற்றுலாவாசிகள் சுற்றிப் பார்ப்பதற்காகவே ஆசிய நாகரீக அருங்காட்சியகம், கினோகுனியா புத்தக கடையில் ஷாப்பிங், மதுபான ஆலையை சுற்றிப் பார்த்தல் போன்ற பயண திட்டங்களையும் இந்த ஹோட்டல் தயாராக வைத்துள்ளது.
இதுபோன்ற வித்தியாசமான திட்டங்கள் மூலமே தங்களது போட்டியாளர்களிடமிருந்து இந்த ஹோட்டல்கள் தனித்து காட்ட முயல்கின்றன. உதாரணமாக இந்தோனேசியாவின் பாலியில் உள்ள ஒரு ஹோட்டல், தங்கள் விருந்தினர்கள் எந்தவித தொந்தரவுமின்றி நிதானமாக நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும் என்பதற்காக அங்கு மட்டும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல ஹோட்டல்கள் இதுபோன்ற வித்தியாசமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. நியூயார்க்கில் உள்ள பார்க் ஹியாட் ஹோட்டல் தங்கள் விருந்தினர்கள் இரவு நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக விசேஷமான அறையை தயார் செய்துள்ளது. இந்த அறையில் மனதிற்கும் இதமளிக்கும் டீ, சத்தங்களை கட்டுப்படுத்தும் கருவிகள், எடை அதிகமான போர்வைகள் தரப்படுகின்றன. இதன் மூலம் இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு புத்துணர்ச்சிமிக்க அனுபவம் கிடைக்கிறது.