இதய நோயினால் ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்.. என்ன காரணம்..?

இதய நோய்கள் பெரும்பாலும் ஆண்களையே தாக்கும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. மேலும் இதுகுறித்த ஆய்வுகள், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகள் போன்றவையும் ஆண்களை மையப்படுத்தியே இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெண்கள் இறப்பிற்கு முக்கிய காரணமாக இதய நோய்கள் இருப்பது அதிகரித்து வருகிறது. அமைதியாக உயிரைப் பறிக்கும் இந்நோயினை முறையாக கண்டறியாமல் அல்லது சிகிச்சை எடுக்காமல் இருப்பதால் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.

பெண்களுக்கு ஏன் அதிக ஆபத்து?

முதற் காரணம், இதய நோய் சம்மந்தமான அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்கு வித்தியாசமாக உள்ளது. ஆண்களுக்கு பெரும்பாலும் நெஞ்சுப் பகுதியில் வலி அல்லது அசௌகர்யம் ஏற்படும். ஆனால் பெண்களுக்கோ சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம், குமட்டல், முதுகு அல்லது தாடைப் பகுதியில் வலி போன்ற நுட்பமான அறிகுறிகள் தென்படும். பெரும்பாலும் இந்த அறிகுறிகளை மன அழுத்தம் அல்லது செரிமானக் கோளாறாக இருக்கும் என நினைத்து முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.

இன்னொரு மிக முக்கிய காரணம், பெண்களுக்கென்று பிரத்யேகமான சிகிச்சை முறைகள் போதுமான அளவு இல்லை. இதுவரை இதய நோய்கள் தொடர்பான ஆய்வுகள் பெரும்பாலும் ஆண்களை மையமிட்டே செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்களிடம் இந்நோய் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்வதில் சில இடைவெளிகள் உள்ளது. ஆகையால் இதற்கான சிகிச்சைகளும் மருந்துகளும் ஆண்களுக்கு பயனளிக்கும் அளவிற்கு பெண்களுக்கு இருப்பதில்லை என்பதே உண்மை.

மேலும் பெண்கள் குறித்து சமூகத்தில் நிலவும் எண்ணம் மற்றும் ஒருபக்க சார்பு போன்றவை இந்நோய்க்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வதில் தாமதப்படுத்துகிறது. அதேப்போல் தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை பெண்கள் வெளிப்படையாக கூறுவதுமில்லை.

இதை தீர்க்க வழி இருக்கிறதா?

இவ்வுளவு சவால்கள் இருந்தாலும், இதய நோயிலிருந்து பெண்களை தற்காத்து கொள்ள சில வழிகள் உள்ளது. முதலாவதாக, உங்கள் குடும்பத்தில் இதற்கு முன் யாருக்காவது இதய நோய் வந்துள்ளதா என்பதையும் தனிப்பட்ட அளவில் உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், டயாபடீஸ், புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடிக்கடி பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் ஆரம்பகட்டத்திலேயே நோயை கண்டறிய முடியும்.

இதுதவிர, ஆரோக்கியமான டயட், சீரான உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் இதய நோய் வரும் அபத்தைக் குறைக்கும்.

இதய நோய் ஆண்களையும், பெண்களையும் ஒருசேர பாதிக்கும் என்றாலும் வித்தியாசமான அறிகுறிகள், போதுமான சிகிச்சை முறைகள் இல்லாமை மற்றும் பெண்கள் குறித்து சமூகம் வைத்துள்ள எண்ணம் போன்றவை காரணமாக இந்நோய்க்கு பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதை புரிந்துகொண்டு, இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்க செயலூக்கமுள்ள முயற்சிகளை எடுத்தால், பெண்களால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ முடியும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *