உங்களுக்கு புதினா ரசம் வைக்க தெரியுமா..? இந்த சிம்பிளான ரெசிபி டிரை பண்ணி பாருங்க..!
புதினா ரசம் என்பது குளிர் அல்லது மழை நாளில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் மசாலாப் பொருட்களுடன் கூடிய புளி சார்ந்த தென்னிந்திய பாணி உணவு ஆகும்.
புதினா இலைகள் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை சரிசெய்யும். மேலும் இது தலைவலி, சீரண சக்தி, வாய் ஆரோக்கியம் என்று நிறைய இடங்களில் பயன்படுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த வீட்டிலேயே எளிதாக புதினா ரசம் எப்படி செய்வது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 1/4 கப்
புளி – அரை எலுமிச்சை அளவு
நெய் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
ரசம் பொடி – 3/4 டீஸ்பூன்
நுணுக்கிய மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
புதினா இலை – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தண்ணீர் தேவைக்கேற்ப
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு பௌலில் புளியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக ஊறவைத்து கொள்ளுங்கள்.
புளி நன்றாக உறியவுடன் அதை நன்றாக கரைத்து அதன் கரைசலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து பிரஷர் குக்கரில் துவரம் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்களுக்கு சமைத்து தானாக பிரஷர் அடங்கும் வரை விடவும்.
பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து நெய் ஊற்றி சூடாக்கி அதில் கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து குறைந்த தீயில் சில விநாடிகள் வறுக்கவும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் ரசம் பொடி சேர்த்து மிதமான தீயில் சில வினாடிகள் வதக்கவும்.
தற்போது வேகவைத்த துவரம் பருப்பை தண்ணீருடன் அப்படியே இதில் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
இதையடுத்து நுணுக்கிய மிளகு மற்றும் புளி கரைசலை சேர்த்து கலந்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
ரசத்தை நீண்ட நேரம் கொதிக்க விடாமல் கொதிக்க ஆரம்பித்த உடனே அடுப்பை அணைத்து விடுங்கள்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு உப்பு, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை போட்டுக்கொள்ளுங்கள்.
பிறகு அதில் சூடான ரசத்தை ஊற்றி 15 நிமிடங்களுக்கு அந்த பாத்திரத்தை இறுக்கமாக மூடிவைக்கவும்.
15 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து பார்த்தால் வாசனையான புதினா ரசம் பரிமாற ரெடியாக இருக்கும்…