ரஜினியும் இல்லை, கமலும் இல்லை… தமிழ் சினிமாவில் ரூ. 1 கோடி சம்பளம் முதன்முதலில் வாங்கிய நடிகர் இவர்தான்!!
தமிழ் சினிமாவில் ரூ. 1 கோடி சம்பளத்தை முதலில் வாங்கிய நடிகர் யார் என்பது குறித்து ரசிகர்கள் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அவர் ரஜினியும் கிடையாது. கமலும் அல்ல என்பதுதான் சுவாரசியமான தகவல். அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இன்றைய கால கட்டத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக விஜய், அஜித், கமல் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு படத்திற்கு குறைந்தது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக நன்றாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன், விஸ்வாசம், ஜெயிலர், லியோ உள்ளிட்ட படங்கள் நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. இதன் காரணமாக படத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்ற எண்ணத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் முதன்முதலாக 1 கோடி ரூபாய் சம்பளம் யார் வாங்கினார் என்ற கேள்வி பரவலாக உள்ளது.
இதற்கு ரஜினி அல்லது கமல்ஹாசன் வாங்கி இருக்கலாம் என்று பலரும் கருத கூடும். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. ராஜ்கிரண் தான் கோலிவுட்டில் முதன்முறையாக 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகராக உள்ளார். அவர் நடித்த படங்கள் முன்பு நல்ல ஹிட் கொடுத்ததால் அவருக்கு ஒரு படத்தில் நடிக்க ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் சம்பளம் பேசியுள்ளார்கள். இதனை ராஜ்கிரண் தனக்கு கிடைத்த அங்கீகாரமாக ஏற்றுக் கொண்டுள்ளாராம். இது தொடர்பாக அவர் பேட்டி ஒன்றில் விவரித்து இருக்கிறார்.
1996 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் மாணிக்கம் என்ற படம் வெளியானது. இந்த படத்திற்காகத்தான் அவர் முதன்முதலாக 1 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கி உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வேறு யாருமில்லை. பிக் பாஸ் மூலமாக மிகப்பெரும் புகழை பெற்ற வனிதா தான் மாணிக்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வந்த புதிதில் ராஜ்கிரன் பெற்ற சம்பளம் மிகப் பெரும் அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
தனக்கு 16 வயது ஆனபோது சென்னைக்கு வந்த ராஜ்கிரண் தினக்கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார், அப்போது அவருக்கு 5 ரூபாய்க்கும் குறைவாகத்தான் சம்பளம் கொடுத்தார்களாம். பின்னர் அவர் படிப்படியாக கிளெர்க் பதவி வரை உயர்ந்துள்ளார். அப்போது அவருக்கு மாதம் ரூ.170 சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. பின்னாளில் படம் விநியோக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படிப்படியாக சினிமாவை கற்றுக் கொண்ட ராஜ்கிரன் படத்தை இயக்கி நடிக்க ஆரம்பித்தார்.
ராஜ்கிரண் தேர்வு செய்து விநியோகித்த படங்களும், தயாரித்து, இயக்கி நடித்த படங்களும் வர்த்தக ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் இவர் நடிக்கும் படம் எப்படியும் வசூலை அள்ளிவிடும் என்ற நம்பிக்கையில் அவருக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக மாணிக்கம் படத்தில் சம்பளம் பேசியுள்ளனர். அவரை தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்டோர் 1 கோடி ரூபாய் சம்பளத்தை தாண்டினர்.