ஒரே பெயர்.. ஐபிஎல் ஏலத்தில் குழம்பிய பிரீத்தி ஜிந்தா: பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் மினி ஏலம் நேற்று முன் தினம்(செவ்வாய்க்கிழமை) துபாயில் நடந்து முடிந்தது. ஐபிஎல் அணிகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம், வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்த நிலையில், எஞ்சிய வீரர்களை ஏலம் எடுக்கும் பணிகள் நடைபெற்றன. ஏலம் தொடங்கியதும் கையில் மீதம் இருக்கும் பணத்துக்கு தகுந்தபடி ஐபிஎல் அணிகள் வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்தனர்.
அப்போது, பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களான பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறாத ஷஷாங் சிங்கை ஏலத்தில் எடுத்தனர். அதன்பிறகு சில வினாடிகளில் இருவரும் குழப்பமுற்ற நிலையில் காணப்பட்டனர். 19 வயதான ஷஷாங் சிங் என்ற வீரரை எடுப்பதற்கு பதிலாக, 32 வயது வீரரான ஷஷாங் சிங்கை பஞ்சாப் அணி தவறுதலாக எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அணியில் வாங்க நினைக்காத வீரர் ஒருவரை பஞ்சாப் அணி வாங்கியதை புரிந்து கொண்ட ஏலதாரர் மல்லிகா சாகர் ஆச்சரியமுற்றார். மேலும், உங்களுக்கு வீரர் வேண்டாமா என்று பிரித்தி ஜிந்தாவிடம் கேள்வியெழுப்பினார்.
வீரர் தேர்வு குறித்து நெஸ் வாடியா அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், ஏலம் ஏற்கனவே முடிந்துவிட்டதால் எதுவும் செய்ய முடியாது என மல்லிகா சாகர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வேறு வழியின்றி சத்தீஸ்கரை சேர்ந்த 32 வயதான ஷஷாங் சிங்கை தனது அணியில் ஏற்றுக்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுதொடர்பாக அந்த அணி தனது எக்ஸ் பக்கத்தில், ஏலப் பட்டியலில் ஒரே பெயருடன் இரண்டு வீரர்கள் இருந்ததே குழப்பத்திற்கு காரணமாகி விட்டதாக பதிவிட்டுள்ளது. 32 வயதான ஷஷாங் சிங்கை வாங்க வேண்டும் என்ற திட்டம் ஏற்கனவே தங்களிடம் இருந்ததாகவும், அவரை அணியில் எடுத்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் பஞ்சாப் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கோப்பையை உச்சி முகந்திராத பஞ்சாப் அணி வீரர்கள் தேர்விலும் கோட்டை விட்டது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.