2 எலக்ட்ரிக் கார்களை வெளியிட உள்ள மாருதி சுசூகி
இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை விரிவடைந்து வரும் நிலையில் மாருதி சுசூகி இரண்டு எலக்ட்ரிக் கார்களை அடுத்த 12-24 மாதங்களில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டிருக்கின்ற மாடல்களை பற்றிய தகவலை தொகுத்துள்ளோம்.
வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படுகின்ற மாருதியின் eVX அடிப்படையிலான எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் YMC 7 சீட் எம்பிவி ஆனது டொயோட்டா உடன் இணைந்து 27PL ஸ்கேட்போர்டு பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளது.
மாருதி எலக்ட்ரிக் கார்கள்
மாருதி சுசூகி காட்சிப்படுத்திய eVX கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவி மாடல் தொடர்ந்து சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த காருக்கான பேட்டரி செல் உட்பட அனைத்து முக்கிய பாகங்களும் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் அமைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.
அடுத்து வரவுள்ள 7 இருக்கை எம்பிவி மாடல் ஆனது இதே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு டிசைனை தவிர அடிப்படையான அம்சங்களை பகிர்ந்து கொள்வதுடன் இரு மாடல்களும் 48kWh மற்றும் 60kWh என இருவிதமான பேட்டரி பேக் ஆப்ஷனை பெற உள்ளது.
எனவே, இந்த இரு மாடல்களின் ரேஞ்ச் 400 கிமீ முதல் 600 கிமீ வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாருதியின் இவிஎக்ஸ் எஸ்யூவி அறிமுகம் குறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி 2025 ஆம் ஆண்டின் துவக்க காலாண்டில் அதாவது ஜனவரி-மார்ச் மாதம் வெளியிட உள்ளது. இந்த மாடல் விற்பனைக்கும் வரும் பொழுது கிரெட்டா இவி , கர்வ் இவி உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
நாம் முன்பே தெரிவித்தபடி டொயோட்டா நிறுவனமும் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் பிளாட்ஃபாரத்தை பயன்படுத்திக் கொண்டு தனது மாடலை 2025 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிட உள்ளது.
7 இருக்கை பெற்ற மாருதி எலக்ட்ரிக் எம்பிவி காரை 2025 ஆம் ஆண்டின் துவக்கம் அல்லது மத்தியில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி சுசூகியின் மிக வலுவான நெட்வொர்க் அமைப்பு ஆனது நாட்டின் முதன்மையான மின்சார கார் தயாரிப்பாளரான டாடா நிறுவனத்துக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் என கருதுகின்றோம்.