அதிமுகவை கழற்றி விடுகிறதா தேமுதிக… பிரேமலதா சொல்வதென்ன..!

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்து, வேட்பாளர்களையும் அறிவிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஒரு மாதமாகவே நாடாளுமன்றம் தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தனது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையை முடித்து விட்டது. சில கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கி விட்டது. பிற கட்சிகளுக்கும் தொகுதிகளை முடிவு செய்யவுள்ளது. தனது கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் முடித்து விட்டது.

தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அதிமுகவிலோ தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.அதேபோல பாஜகவிலும் இழுபறியே நிலவுகிறது.

தேமுதிக தரப்பில் முதலில் 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கேட்கப்பட்டது. ஆனால் அதிமுகவோ 4 லோக்சபா தொகுதிகள் தருகிறோம், ராஜ்யசபா சீட்டுக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பிரேமலதா விஜயகாந்த் தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரவில்லை. மேலும், கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறை ஒதுக்கிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளையே மீண்டும் ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்பட்டது.

அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தேமுதிக அவைத்தலைவர் பி இ இளங்கோவன், அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், பா. பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தொகுதிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது பாஜகவுடன் பேச தேமுதிக தரப்பு திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சியும், அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தே.மு.திக. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் நேரம் தரவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *