விரைவில் நாமக்கல் வழியாக மதுரைக்கு வந்தே பாரத் ரயில் :இணை அமைச்சர் முருகன்..!

நாமக்கல் லோக்சபா தொகுதி பா.ஜ., தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம், மாவட்ட பா.ஜ அலுவலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நாட்டை மிக வேகமாக வளர்ச்சி அடைந்த நாடாக பிரதமர் உருவாக்கி வருகிறார்.

ஏழை எளிய மக்கள் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 80 கோடி பேருக்கு, மாதம், 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட்டு பயன்பெறுகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஒன்றரை கோடி ரேஷன்கார்டுதாரர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர். ஆனால், தமிழக அரசு, ஸ்டிக்கர் ஒட்டி தனது திட்டம் போல காட்டிக் கொள்கிறது.

விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு ரூ. 6,000 கிசான் சம்மான் நிதி, ஏழை எளிய மக்களின் மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்பட அடுத்த, 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் அளித்துள்ளார். பிரதமரின் லட்சியம், வரும், 25 ஆண்டுகளில் நமது நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். இந்தியா வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. அதை நோக்கி நாம் பயணம் செய்து வருகிறோம்.

உள்நாட்டு தயாரிப்பான வந்தே பாரத் ரயில்கள், கோவை – பெங்களூரு, சென்னை – மைசூரு, சென்னை – நெல்லை, கோவை – சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து மதுரைக்கு, வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நாமக்கல் வழியாக இந்த ரயில் இயக்கப்படும். நாமக்கல்லில் அந்த ரயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் எடுத்துச் சென்று நிறைவேற்றித் தரப்படும்.

ஆத்ம நிர்பர் பாரத் தொழில்நுட்பத்தோடு சந்திரயான் மூன்று வெற்றிகரமாக தென் துருவத்தில் செலுத்திய முதல் நாடு நமது பாரத நாடு. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதற்காக ஆய்வு மண் எடுத்துச் செல்லப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து நிலவுகள், நாமக்கல்லில் இருந்து ஆலய மணிகள் சென்றுள்ளன.

இதுதான் ஒரே நாடு உன்னத பாரதம் ஆகும். ராமக்கல் என்பதுதான், நாமக்கல்லாக மருவி உள்ளது. ராமருடைய தொடர்பில் உள்ள ஊர்தான் நாமக்கல். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவையும் பிரதமர் மோடி நிறைவேற்றி வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *