அமலுக்கு வந்தது சிஏஏ சட்டம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
1955-ம் ஆண்டு அமலில் இருந்த குடியுரிமைச் சட்டத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டில் சில மாற்றங்களை செய்து மசோதாவாக நிறைவேற்றியது. அதாவது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பார்சிகள், பெளத்தர்கள், சீக்கியர்கள் உட்பட 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்கும் வகையில் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாத போதிலும், இங்கு 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் இச்சட்டத்தின் சாராம்சம்.
இதனிடையே, இந்த சிஏஏ சட்ட மசோதாவை நிறைவேற்ற நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் இந்தியா முழுவதும் இந்த சட்டத்துக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற மதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் வழங்கக் கூடாது? எனக் கேள்வியெழுப்பினர். இது ஒருபுறம் இருக்க, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்ததால் இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
இப்படி பலமான எதிர்ப்பு இருந்த போதிலும், சிஏஏ சட்ட மசோதவை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியது. ஆனால், இந்த சட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வராமல் தொடர்ந்து தள்ளி வைத்துக் கொண்டே வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில், சிஏஏ சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு நேற்று மாலை (மார்ச் 11) 6 .15 மணியளவில் அறிவித்தது. மேலும், இதுதொடர்பான அறிவிக்கையையும் அரசிதழலில் வெளியிட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சிஏஏ சட்டம் அமலுக்கு வந்திருப்பது, மத்திய பாஜக அரசுக்கு இந்துக்களின் ஆதரவை அதிகரிக்கும் என ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த சட்டத்தை நிறைவேற்றி இருப்பதால் பாஜகவுக்கு பெரிய பின்னவடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.