சூடிக் கொண்ட பெருமானுக்கு சிறப்பு செய்யும் சந்திரன்! ‘மூன்றாம்பிறை’ தரிசனத்தின் சிறப்பும் சிவவழிபாடும்…
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் வானத்தில் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே மாலை 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். ஆயுள் விருத்தியாகும், செல்வங்களும் சேரும். திங்கட்கிழமையன்று வரும் மூன்றாம் பிறை சூடிய சிவனை தரிசனம் செய்தால், ஆண்டு முழுக்க சந்திரனை வணங்கிய பலன்கள் கிடைக்கும்.
மூன்றாம்பிறையை சிவன் சூடிய கதை
மாமனார் தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் வருத்தமுற்ற சந்திரனின் இருபத்தேழு மனைவிகளும் கணவனின் சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டி, கணவருடன் மனைவிகளும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். தவத்தை மெச்சிய சிவபெருமான், சாபவிமோசனம் அளித்து, சந்திரனை தனது தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ சூடிக் கொண்டார்.
மூன்றாம் பிறை சிறப்பு
மூன்றாம் பிறையின் சிறப்பை அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொண்டுள்ளன. இஸ்லாம் மதம், ஜைனம், கிறித்தவம், இந்து மதம் என்று எல்லா மதங்களும் மூன்றாம் பிறையை காண்பது நல்லது என்று சொல்கின்றன.
ஆயுளை விருத்தி செய்யும் , செல்வங்களை சேர்க்கும், மூன்றாம் பிறை பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களையும் நீக்கும். மூன்றாம் பிறைச் சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.
மூன்றாம் பிறையை வணங்குவது
சிவபெருமானின் தலையை அலங்கரிக்கும் மூன்றாம் பிறையை வணங்குவது என்பது பிறையணிந்த பெருமானை தரிசிப்பதற்கு ஒப்பானது. மூன்றாம் பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம்.
மூன்றாம் பிறை பார்த்தால் கிடைக்கும் நன்மைகள்
தொடர்ந்து மூன்று பிறையை மூன்று முறை தரிசித்தால் மூர்க்கனுக்கும் அறிவு கிடைக்கும் என்பதும், நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் கர்மங்கள் நாசமாகும் என்பதும் நம்பிக்கை. அதேபோல, ஐந்து முறை மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசனாவன் என்றும், மூன்றாம் பிறையை ஆறு முறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும் என்பதும் நம்பிக்கை தான்.
ஏழு முறை மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்தால் கடன்சுமை தீரும். மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருவது வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்றுத் தரும்.
ஓரிரு முறை தரிசனம் செய்த உடனே வாழ்க்கையில் கேட்டவை கிடைத்துவிட்டாலும், தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசனம் செய்துவரவும். ஏனென்றால், மூன்றாம் பிறை தரிசனம் கிடைப்பது என்பது மிகவும் அரிது என்று சொல்வார்கள்.