டி20 உலக கோப்பையில் இந்த வீரர் நிச்சயம் இல்லை! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி!
கணுக்கால் அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து வரும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்குவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது ஷமி பங்கேற்கவில்லை. கடந்த மாதம் தசைநார் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷமி, ஐபிஎல்லில் இருந்தும் வெளியேறினார். மேலும், ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையையிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முகமது ஷமி கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார். ஆரம்பத்தில் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஷமி, பின்னர் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வரும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ” முகமது ஷமியின் அறுவை சிகிச்சை முடிந்து, தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி நிச்சயம் விளையாடுவார். கே.எல். ராகுல் தற்போது குணமடைந்து வருகிறார். தற்போது அவர் NCAல் இருக்கிறார்” என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல் வலது குவாட்ரைசெப்ஸில் வலி ஏற்பட்டதால் கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சமீபத்தில் லண்டனில் சிகிச்சை பெற்ற அவர் ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரிஷப் பண்ட் தற்போது குணமடைந்து உள்ளதாகவும் ஐபிஎல்லில் அவர் விளையாடுவார் என்றும் ஜெய் ஷா கூறியுள்ளார். கடந்த 2022 டிசம்பரில் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய பந்த் தற்போது குணமடைந்து வருகிறார்.
“பந்த் நன்றாக பேட்டிங் செய்கிறார், நன்றாக கீப்பிங் செய்கிறார். விரைவில் அவரின் உடற்தகுதி பற்றி அறிவிப்போம். அவர் எங்களுக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடினால், அது எங்களுக்கு பெரிய விஷயம். அவர் இந்திய அணியின் மிகப்பெரிய பெரிய சொத்து. ஐபிஎல்லில் அவர் எப்படி விளையாடுகிறார் என்று பார்ப்போம், அதை பொறுத்து உலகக் கோப்பை அணியில் விளையாட முடியும்” ஜெய் ஷா மேலும் கூறி உள்ளார். இந்த விபத்தால், வலது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு, மணிக்கட்டு மற்றும் கணுக்கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் தசைநார் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. அவரது ஐபிஎல் உரிமையாளரான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பந்த இந்த ஆண்டு பங்கேற்பார் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.