Rishabh Pant: ரிஷப் பண்ட்டிற்கு கடைசி சான்ஸ் ஐபிஎல் தான், நன்றாக விளையாடினால் டி20 உலகக் கோப்பையில் இடம்!
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கிய நிலையில் ஒரு ஆண்டிற்கும் மேலாக ஓய்வில் இருந்தார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதிக்கான கிளீரன்ஸ் சான்றிதழ் பெற இருக்கிறார். இதையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார்.
எனினும் அவர் ஓரிரு போட்டிகளில் விளையாடிய பிறகு தான் அவரது உடல்நிலையைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ரிஷப் பண்ட்டின் உடல்நிலை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவர் நன்றாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்கிறார். விரைவில் உடல் தகுதியை அறிவிப்போம்.
டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடினால், அது பெரிய விஷயமாக இருக்கும். இந்திய அணியின் சொத்து ரிஷப் பண்ட். அவர், நன்றாக விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்தால் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார். இதனால், அவர் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை உற்று நோக்குவோம் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே விக்கெட் கீப்பருக்கான ரேஸில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் எப்படி அணியில் இடம் பெறுவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.