இளவரசி கேட் புகைப்படம் வெளியிட்டதால் மன்னருக்கு ஏற்பட்ட பாதிப்பு
தான் நன்றாக இருக்கிறேன் என மக்களுக்கு செய்தி சொல்வதற்காக இளவரசி கேட் வெளியிட்ட புகைப்படம், மக்களுக்கு அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக, நாட்டில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிட்டது.
இளவரசி கேட் வெளியிட்ட புகைப்படம்
பிரித்தானிய இளவரசி கேட்டுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியே தலைகாட்டவே இல்லை. அதனால் இளவரசிக்கு என்ன ஆயிற்று என பொதுமக்களும் ஊடகங்களும் கேள்விகள் எழுப்ப, அது தொடர்பான வதந்திகளும் பரவத்துவங்கின.
இந்நிலையில், தான் நன்றாக இருப்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், அன்னையர் தினத்தன்று கேட் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
ஆனால், அந்த புகைப்படம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியது. காரணம், அதில் இளவரசர் வில்லியம் இல்லை, மேலும், இளவரசியின் விரலில் அவரது திருமண மோதிரம் இல்லை. பின்னர் அது எடிட் செய்யப்பட்ட ஒரு புகைப்படம் என தெரியவந்தது. இளவரசி கேட்டும், தான் அந்த புகைப்படத்தை எடிட் செய்ததாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
புகைப்படம் எழுப்பியுள்ள கேள்விகள்
பொதுவாக, திரைப்படத்துறை பிரபலங்கள், மொடல்கள் தங்கள் புகைப்படங்களை எடிட் செய்து வெளியிடுவார்கள். அது கேளிக்கைச் செய்தியாகிவிடும், மக்களுக்கு அது நல்ல பொழுதுபோக்காகவும் அமைவதுண்டு. ஆனால், அதையே ராஜ குடும்ப உறுப்பினர் செய்யும்போது, அது நம்பிக்கை குறித்த ஒரு விடயமாகிவிடுகிறது.
மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், மக்கள் தன்னை நம்பவேண்டுமானால், அவர்கள் முன் நேரடியாகத் தோன்றவேண்டும் என்று கூறுவது வழக்கம். ஆக, இளவரசி கேட் இவ்வளவு காலமாக வெளியே தலைகாட்டாத நிலையில், அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் உண்மையானதல்ல, எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதால், மக்களும், ஊடகங்களும், ராஜ குடும்பம் தொடர்பில் தாங்கள் காணும் விடயங்களை நம்பலாமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
மன்னருக்கு ஏற்பட்ட பாதிப்பு
இன்னொரு விடயம், நேற்று, காமன்வெல்த் தினம். அதையொட்டி, ஞாயிறன்று காமன்வெல்த் தின ஆராதனை நடைபெற்றது. காமன்வெல்த் தினத்தையொட்டி மன்னர் மக்களுக்கு உரையாற்றினார். ஆனால், வரலாற்றில் முக்கியமான அந்த நிகழ்வை பின்னுக்குத் தள்ளும் ஒரு நிலைமையை, இளவரசி கேட்டின் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் தொடர்பான செய்தி உருவாக்கிவிட்டது.
மொத்தத்தில், மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று நினைத்து இளவரசி கேட் செய்த செயல் பெரும் குழப்பத்தை உருவாக்கிவிட்டது.