6.8 சதவீதம் வளர்ச்சியடைந்த ஹூண்டாய் நிறுவனம்… எதிர்கால திட்டங்கள் என்ன..?
பட்ஜெட் விலையில் பல ஆப்ஷன்களுடன் கார்களை தயாரித்து விற்பனை செய்துவரும் கொரிய நிறுவனமான ஹூண்டாய், தங்களின் பிப்ரவரி 2024 மாதத்தின் கார் விற்பனை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நிறுவனம் மொத்தம் 60501 கார்களை பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது நிறுவனத்தின் 6.8% வளர்ச்சி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் மட்டும் நிறுவனம் 50201 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே, உள்நாட்டில் தயாரித்து வெளிநாட்டிற்கு 10300 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாதத்தின் இந்த மொத்த விற்பனையில் கிரெட்டா மாடல் கார்கள் மட்டும் 15 ஆயிரத்து 276 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. 2015 அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இதுவே கிரெட்டா கார்கள் விற்பனையில் புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் இந்தியாவின் சிஓஓ, தருண் கார்க், நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் எஸ்யூவி பிரிவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை குறித்து பேசினார். அவர் தன் உரையில், இந்தியாவின் பயணிகள் வாகனத் தேர்வு எஸ்யூவி பக்கம் சாய்ந்துள்ளதாகக் கூறினார். அதன்படி இந்த வகை கார்களின் விற்பனை வளர்ச்சி 52 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த இரண்டு மாதங்களில் ஹூண்டாய் கார்கள் விற்பனையிலும் எதிரொலித்தது. அதன்படி, ஹூண்டாய் விற்பனையில் 64 சதவீதத்தை எஸ்யூவி கார்கள் பூர்த்தி செய்துள்ளன. இதுவே, நடப்பு நிதியாண்டின் ஹூண்டாய் எஸ்யூவிக்களின் தேவை 67 விழுக்காடாக கணக்கிடப்பட்டுள்ளது. சந்தையின் இந்த போக்கை தக்கவைத்துக் கொள்ள நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தருண் கார்க் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தருண் கார்க், “எக்ஸ்டர் மாடல் கார்களில் அடிப்படையாக நாங்கள் கொண்டு வந்த 6 ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களை அனைத்து மாடல் கார்களிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இது சாத்தியப்படும்போது, மக்களின் பார்வை நிறுவனத்தின் வாகனங்கள் மீது இருக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரியில் முதன்முறையாக கிராமப்புறங்களில் 20 விழுக்காடு அளவு ஹூண்டாய் கார்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தருண் கூறியுள்ளார். இதன்மூலம், நிறுவனம் சீரான விநியோகத்தை மேற்கொண்டு வருவது உறுதி ஆகியுள்ளது. உற்பத்தித் திறனை விரிவுபடுத்தும் திட்டங்களுடன், வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதை ஹூண்டாய் இந்தியா நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் 85,000 முதல் ஒரு லட்சம் வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் பூனே ஆலையின் திறனை ஒரு லட்சத்து 50,000 ஆக உயர்த்த நிறுவனம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதனுடன் மின்சார கார்களுக்கு தேவைப்படும் இவி சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவும் நிறுவனம் பலகட்ட முன்னெடுப்புகளை நிறைவேற்றி வருகின்றது. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவை வழங்குவதற்காக 11 அதிவிரைவு சார்ஜிங் ஸ்டேஷன்களை சில நகரங்களில் அமைத்துள்ள நிறுவனம், மேலும் 10 இடங்களை தேர்வு செய்து இவற்றை நிறுவ திட்டம் வகுத்துள்ளது.