இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்குமா..? அரசின் முடிவு என்ன..?

தற்போது வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கின்றன. மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென ஊழியர்கள் நீண்ட நாட்களாக கேட்டு வருகின்றனர்.

சம்பள உயர்வுக்கு ஒப்புதல்: இந்திய வங்கிகள் சங்கம் (Indian Banks Association) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் (Staff Unions) கடந்த வெள்ளியன்று பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு ஒப்பந்தங்களை எட்டின. அதில் குறிப்பிடத்தக்கது ஊழியர்களின் ஊதியத்தை ஆண்டுதோறும் 17 சதவீதம் உயர்த்துவது என்ற ஒப்பந்தம். இதன்படி நவம்பர் 1,2022 தேதி முதல் சம்பள உயர்வு அமலுக்கு வரும்.இதனால் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் ஆதாயம் பெறுவார்கள்.

5 நாட்கள் வேலைக்கு ஒப்புதல்: இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் இடையிலான பேச்சுவார்த்தையில் முக்கியமாக பேசப்பட்டது 5 வேலை நாட்கள் என்ற கோரிக்கை. அனைத்து சனிக்கிழமைகளையும் வார விடுமுறை தினமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதனை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசின் ஒப்புதல் கிடைத்த உடன் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசு ஒப்புதல் தரும் பட்சத்தில் வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்.

அதே வேளையில் வார நாட்களில் வங்கி ஊழியர்களின் பணி நேரம் கூடுதலாக 40 நிமிடங்கள் நீட்டிக்கப்பட உள்ளன. அதாவது காலை 9.45 மணி முதல் 5.30 மணி வரை வங்கி ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும்.

வேலைக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படுவது என்பது மத்திய அரசு அளிக்கும் ஒப்புதலின் அடிப்படையில் தான் தீர்மானிக்கும். ரிசர்வ் வங்கியின் கருத்தை கேட்டு அதனடிப்படையில் தான் அரசு முடிவெடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகள் செயல்படாது என்பது வேலைக்கு செல்லக்கூடிய வங்கி வாடிக்கையாளர்களை பெரிதாக பாதிக்கும். ஏனெனில் வார நாட்களில் வேலைக்கு செல்வோர் வங்கி சார்ந்த பணிகளை சனிக்கிழமைகளில் தான் மேற்கொள்வர்.

அரசு இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது பெரும்பாலான வங்கி பணிகளை டிஜிட்டல்முறையிலேயே மேற்கொள்ள முடியும் என்றாலும், குறிப்பிட்ட பணிகளுக்கு மக்கள் வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. எனவே அரசு இந்த விஷயத்தை ஆராய்ந்தே முடிவெடுக்கும்.

பெண் ஊழியர்களுக்கு சிக் லீவ்: வங்கிகளில் பணி செய்யும் அனைத்து பெண் ஊழியர்களும் மருத்துவச் சான்றிதழை வழங்காமல் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சிக் லீவ் (Sick Leave)எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர் என இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் அறிவிக்கப்பட்டது.

ஒரு ஊழியர் ஓய்வு பெற்றாலோ அல்லது பணியில் இருக்கும்போது இறந்தாலோ, அவருக்கு இருக்கும் பிரிவிலேஜ் விடுமுறைக்கான (Privilage Leave) தொகை அதிகபட்சமாக 255 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *