தேர்தல் பத்திரம் தரவுகளை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய SBI.. மார்ச் 15 அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்த ஆவணங்களைத் தயார் செய்துள்ளதாக, அதைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது.
எஸ்பிஐ வங்கி ஜூன் 30 அன்று ஆவணங்களை வெளியிட உச்ச நீதிமன்றத்திடம் கால நீட்டிப்பைக் கோரிய நிலையில் அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதுமட்டும் அல்லாமல் இன்று மார்ச் 12 ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுமாறு எஸ்பிஐ-க்கு ஒரு நாள் கெடு விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து எஸ்பிஐ அனைத்து ஆவணங்களையும் தயார் செய்துவிட்டதாகவும், தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை இன்று மாலை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாலை 6.45-க்கு எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தேதி குறித்த அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டத்தை ‘அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது’ என்று குறிப்பிட்டு ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது.
அரசியல் நிதியுதவி என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 15 அன்று ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இது பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திர நடைமுறையாகும். இதில் வெளிப்படையானதாக இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
தேர்தல் பத்திரத்தை வெளியிட எஸ்பிஐ மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்கள் பொதுக் வெளியில் மக்களின் பார்வைக்குக் கிடைக்கும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டு தனித்தனி பட்டியல்களை வழங்கும், ஒரு பட்டியலில் பத்திரங்கள் வாங்கிய தேதி, வாங்குபவரின் பெயர் மற்றும் ஒவ்வொரு பத்திரத்தின் மதிப்பும் இருக்கும்.
மற்றொரு பட்டியலில் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் ஒவ்வொரு பத்திரத்தின் விவரங்களையும், பணமாக்கப்படும் தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்பையும் இருக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளைத் தொகுத்து இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.