விடைத்தாளில் நூதன முறையில் கோரிக்கை வைத்த மாணவி! பாஸ் மார்க் போடுங்க.. இல்லைன்னா…

பீகாரில் கடந்த மாதம் 15-ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. அம்மாநிலத்தை பொறுத்தமட்டில் 10-ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு என 2 வகைகளாக தேர்வு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சி என்பது அமையும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் 10-ம் வகுப்பு மாணவியின் விடைத்தாள் வைரலாகி பரவி வருகிறது. அந்த விடைத்தாளில் மாணவி எழுதிய வாசகங்கள் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது தேர்வில் தேர்ச்சி செய்யாவிட்டால் தான் எதிர்கொள்ள உள்ள பிரச்சினைகளை பற்றி கூறியதோடு, தான் தேர்ச்சி பெறாவிட்டால் தந்தை திருமணம் செய்து வைத்துவிடுவார். இதனால் தயவு செய்து தனக்கு எப்படியாவது பாஸ் மார்க் போட்டுவிட வேண்டும் எனவும் மாணவி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த மாணவி தனது விடைத்தாளில், “எனது அப்பா ஒரு விவசாயி. அவருக்கு குறைந்த அளவில் தான் வருமானம் கிடைக்கிறது. இதனால் எனது கல்வி செலவை அவரால் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் அவர் என்னை படிக்க வைக்க விரும்பவில்லை. நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறி வருகிறார். அதையும் மீறி தான் நான் படித்து வருகிறேன்.

மேலும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள். எனக்கு நல்ல மதிப்பெண்கள் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவி” என தெரிவித்துள்ளார்.

 

விடைத்தாளில் மாணவி வைத்த இந்த கோரிக்கை தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த மாணவி தனது குடும்ப சூழல் குறித்த விபரத்தை தேர்வு விடைத்தாளில் எழுதி இருக்க இன்னும் பல மாணவர்கள் பாடல்கள், கதைகளை விடைத்தாளில் எழுதி வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, மாணவ – மாணவிகள் இதுபோன்ற கோரிக்கையை வைப்பது என்பது முதல் முறையல்ல. அவ்வப்போது இத்தகைய கோரிக்கை என்பது விடைத்தாளில் இருக்கும். ஆனால் நாங்கள் அதற்கெல்லாம் மதிப்பெண்கள் வழங்குவது இல்லை. விடை சரியாக இருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *