நாகை, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளது. அதன்படி, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. ஒரு தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.
இதனிடையே, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில், பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
கடந்த தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளே ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் – இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன் இடையே கையெழுத்தானது.
முன்னதாக, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.