மாருதி சுஸுகி லிஸ்டிலேயே இல்ல!! டாடா கார்களுக்கு தான் இந்த செக்மெண்ட்டில் டிமாண்ட் ஜாஸ்தி!
எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars), உலகம் முழுவதும் வேகமாக பிரபலமாகி வருபவை. பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும் மற்றும் பசுமையான போக்குவரத்தை பெறலாம் என்பதினாலேயே பல வெளிநாட்டு அரசாங்கங்கள் எலக்ட்ரிக் கார்களை அதிகளவில் ஊக்கப்படுத்துகின்றன. இதில் நமது இந்தியா மட்டும் என்ன விதிவிலக்கா…
கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 7,231 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், அதில் 7,231 எலக்ட்ரிக் கார்கள் என்பது மிகவும் குறைவாக தெரியலாம். ஆனால், எலக்ட்ரிக் கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
ஏனெனில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 7,231 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2023 பிப்ரவரி மாதத்தில் வெறும் 4,766 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும், இந்த ஆண்டு பிப்ரவரியில் 2,465 எலக்ட்ரிக் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2024 ஜனவரி மாதத்தில் இதனை காட்டிலும் 933 கார்கள் அதிகமாக 8,164 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
கடந்த 2024 பிப்ரவரி மாதத்திலும் வழக்கம்போல், அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 4,941 எலக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 பிப்ரவரி மாதத்தில் வெறும் 3,925 டாடா எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது 25.89% அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதத்தில் 650 டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை குறைவாக செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அந்த மாதத்தில் 5,591 டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் டியாகோ இவி, டிகோர் இவி, பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி என 4 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து 2வது இடத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் உள்ளது. டாடா நிறுவனம் போல் இல்லாமல், எம்ஜி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் கோமெட் இவி மற்றும் இசட்.எஸ் இவி என 2 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் குறிப்பாக, கோமெட் இவி அறிமுகத்திற்கு பிறகே இந்தியாவில் எம்ஜி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ஏனெனில், இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக எம்ஜி கோமெட் இவி விளங்குகிறது.
எம்ஜி நிறுவனத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 1,053 ஆகும். ஆனால், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெறும் 362 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இதில் இருந்து, கோமெட் இவி காரின் அறிமுகத்திற்கு பிறகு எம்ஜி மோட்டாரின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை அறியலாம்.
எம்ஜி நிறுவனத்துக்கு அடுத்து மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் 622 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெறும் 7 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது மற்றும் 5வது இடங்களில் முறையே பிஒய்டி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் உள்ளன. இவை இரண்டும் கடந்த மாதத்தில் விற்பனை செய்த எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை முறையே 143 மற்றும் 127 ஆகும்.