வெற்றிலை போட பிடிக்காதா? இப்படி பயன்படுத்தினா நோய்களே உங்களை நெருங்காது!
வெற்றிலை என்பது நமது தமிழ் கலாசாரத்தில் மிகவும் முக்கியமானது. நல்லது கெட்டது என எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அங்கு வெற்றிலை இருக்கும். வெற்றிலை பயன்படுத்துவது என்பது பூஜை முதல் உணவு வரை தினசரி வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. வெற்றிலையில் அன்னை மகாலட்சுமி வாசம் இருப்பதாகவும் ஐதீகம். மங்கலமான வெற்றிலை, சிறந்த மருத்துவ பண்புகளையும் கொண்டது.
மலச்சிக்கல் முதல் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் என நோய் தீர்க்கும் மருந்தாகவும் வெற்றிலை உள்ளது. வெற்றிலையை எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து பயன்படுத்துவோம்.
பொதுவாக வெற்றிலையை பூஜைக்கு பயன்படுத்தினாலும், அதன்பிறகு அதை பயன்படுத்தலாம். உணவு உண்ட பிறகு வெற்றிலையை தாம்பூலமாக தரிப்பது உணவு செரிமானத்திற்கு மட்டுமல்ல, பல்வேறு நோய்களும் அண்டாமல் இருப்பதற்காக என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
வெற்றிலைக் கசாயம் என்றும் வெற்றிலை நீர் அறியப்படுகிறது. இது, பல நோய்களுக்கு மருந்தாகிறது என்றால், வெற்றிலை சாறு பல்வேறு பிரச்சனைகளை சீர் செய்கிறது. அதேபோல வெற்றிலையை தணலில் வாட்டி பற்று போட்டால் தலைவலி சரியாகும், பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்கவும், பால் கட்டியினால் உண்டாகும் மார்பக வீக்கத்தைக் கரைக்கவும் வெற்றிலையை வாட்டி பத்து போடலாம்.
வெற்றிலையை அரைத்து சாறாக எடுத்து குடித்தால் எந்தெந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
வெற்றிலை நீரை குடிப்பதால் மலச்சிக்கல் முதல் மூட்டு வலி வரை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் வெற்றிலை நீரில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளது.
மலச்சிக்கலுக்கு மருந்தாகும் வெற்றிலை
ஆன்டிஆக்ஸிடன்ட்களின் மையமாக இருக்கும் வெற்றிலை, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது. வெற்றிலை நீரை தொடர்ந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
சுவாச பிரச்சனைகளை போக்கும் வெற்றிலை நீர்
சுவாச பிரச்சனைகளை போக்க வெற்றிலையை சாறு எடுத்து குடிக்கலாம். இருமல் மற்றும் சளிக்கு நல்ல மருந்தாகும் இது, நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களும் வெற்றிலை சாறு குடித்து வருவது நல்லது.
வாய் துர்நாற்றத்தை குறைக்க வெற்றிலை நீர்
வெற்றிலை நீரை தொடர்ந்து குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் குறையும். வெற்றிலையில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் வாயில் வளரும் பாக்டீரியாவை அழிக்கும். பற்குழி, பல் சிதைவு போன்ற பிரச்சனைகளையும் இது குறைக்கும்.
வாயு பிரச்சனை
சுவையாக இருக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டாலும், வாயு ஏற்படுத்தும் உணவுகளை உண்டாலும் ஏற்படும் வாயு பிரச்சனைக்கு வெற்றிலை நீர் பயனுள்ளதாக இருக்கும். வயிறு பொருமல், வாயு பிரச்சனை என வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க வெற்றிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவும். இரைப்பை குடல் பிரச்சினைகளில் இருந்து வயிற்றுக்கு நிவாரணம் வழங்கும் இந்த வெற்றிலை நீர், அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்து ஆகும்.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம்
வெற்றிலை நீர் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் வழங்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள வெற்றிலையைப் பயன்படுத்தி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் முடக்கு வாதத்தால் ஏற்படும் அசௌகரியம் மற்றும் வலிகளையும் குறைக்கலாம்.
வெற்றிலை நீர் தயாரிப்பது எப்படி?
வெற்றிலையை அப்படியே சாப்பிட்டால் நல்லது. ஆனால் சிலருக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருக்காது. அவர்கள், வெற்றிலையை மிக்சியில் அரைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது வெற்றிலையை இடித்து நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.