இங்கிலாந்து ஜாம்பவானிடம் அவமானப்பட்ட சுப்மன் கில்.. வெளியே சொல்ல மறுத்த காரணம் இதுதான்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் சுப்மன் கில் – ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையே சிறிய அளவிலான வாக்குவாதம் நடைபெற்றது. ஆனால் அது குறித்து சுப்மன் கில் அப்போது பேச மறுத்து விட்டார்.
ஆண்டர்சனுக்கும் தனக்கும் இடையிலான அந்த பேச்சுவார்த்தை தனிப்பட்ட ஒன்றாக இருப்பதே இருவருக்கும் நல்லது என அவர் அப்போது கூறி இருந்தார். இந்த நிலையில், அது குறித்து ஆண்டர்சன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதில் தன்னை சீண்டிய ஆண்டர்சனை சுப்மன் கில் ஓய்வு பெறுமாறு கூறி இருக்கிறார். அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஆண்டர்சன். அந்த பதிலடியை தான் வெளிப்படையாக சொல்ல மறுத்து இருக்கிறார் சுப்மன் கில்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 41 வயதை எட்டி இருக்கும் வேகப் பந்துவீச்சாளர். பொதுவாக வேகப் பந்துவீச்சாளர்கள் 35 வயதுக்கு மேல் ஆனாலே சோர்ந்து விடுவார்கள் என்ற ஒரு எண்ணம் கிரிக்கெட்டில் உள்ளது. ஆனால், 41 வயதிலும் ஆண்டர்சன் பந்து வீசி விக்கெட் வீழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சதம் அடித்தார். அப்போது ஆண்டர்சன் அவர் அருகே வந்து, “வெளிநாட்டில் எத்தனை சதம் அடித்து இருக்கிறாய்?” என கேள்வி கேட்டு சீண்டி இருக்கிறார். அதனால் கோபம் கொண்ட சுப்மன் கில், “நீங்கள் ஓய்வு பெற்று செல்லுங்கள்” என ஆண்டர்சனை பார்த்து கூறி இருக்கிறார்.
அடுத்த சில பந்துகளில் தனது வயதை மறைமுகமாக குத்திக் காட்டிய சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார் ஆண்டர்சன். இந்த சம்பவத்தை பற்றி தற்போது ஆண்டர்சன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். என்னதான் ஆண்டர்சன் சீண்டி இருந்தாலும் சுப்மன் கில் அவரது வயதை சுட்டிக் காட்டி இருக்கத் தேவையில்லை. அதற்கு பதிலடி தரும் வகையில் விக்கெட்டை வீழ்த்திக் காட்டி, சுப்மன் கில்லை அவமானப்படுத்தி இருக்கிறார் ஆண்டர்சன்.