இங்கிலாந்து தொடருக்கே வந்திருப்பேன்.. ஜெய்ஷா தடுத்தார்.. கடவுள் கொடுத்த வாழ்க்கை இது- ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி கொடூர கார் விபத்தில் சிக்கினார். உயிர்பிழித்ததே அதிசயம் என்ற நிலையில் இருந்த ரிஷப் பண்ட், கடந்த 14 மாதங்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி தன்னுடைய உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில், அவரை சோதித்த என் சி ஏ மருத்துவர்கள் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக கூட களமிறங்கலாம் என்று அனுமதி அளித்து விட்டார்கள். இதனால் தற்போது ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிட்டல் அணியின் பயிற்சி முகாமில் பங்கு பெறுவதற்காக விசாகப்பட்டினம் செல்கிறார்.
அப்போது ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிஷப் பண்ட், உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றதை அடுத்து, பிசிசிஐ தமக்கு அனுமதி வழங்கியதை நினைத்து மகிழ்ச்சி கொள்வதாக கூறினார். இந்த ஒரு நிகழ்வுக்காக தான் நான் காத்திருந்தேன். நீண்ட பயணமாக இது இருந்தது. நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து மூன்று அல்லது ஆறு மாதம் விளையாடாமல் இருக்கலாம்.
ஆனால் அதற்கு மேல் சென்றால் நிச்சயம் நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுவீர்கள். இருப்பினும் என் மீது நான் அழுத்தத்தை போட்டுக் கொள்ளவில்லை. முதலில் உடலளவில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக சாப்பாடு விஷயத்தில் தனி கவனம் செலுத்தினேன். இதற்கு என தனி குழு என்னை பார்த்துக் கொண்டார்கள்.
அதன் பிறகு கடின உடற்பயிற்சியில் மேற்கொண்டேன். இந்த விபத்துக்கு பிறகு என்னால் செய்ய முடிந்த சின்ன சின்ன விஷயத்திற்கு கூட நான் நன்றி உணர்வுடன் இருக்கின்றேன். இந்த விபத்திற்கு பிறகு நான் மிகவும் ஒழுக்கமான நபராக மாறிவிட்டேன் என்று கூட சொல்லலாம். எனக்கு கடவுள் மீதான பக்தி அதிகமாகி விட்டது. அப்படி ஒரு விபத்தில் சிக்கியும் நான் உயிர் பிழைத்தேன் என்றால் கடவுள் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார்.
இவ்வளவு விபத்தில் சிக்கியும் எனக்கு காலில் மட்டும் தான் காயம் இருந்தது. அந்த காயத்தையும் பார்த்த மருத்துவர்கள் எனக்கு செயற்கை காலை பொருத்த வேண்டும் என்று கூறினார்கள். அப்போதும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. கடவுள் என்னை மீண்டும் காப்பாற்றுவார் என்று எண்ணினேன். தற்போது 14 மாதங்கள் கழித்து நான் கிரிக்கெட் விளையாட போகிறேன்.
முதலில் நான் ஐசிசி உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக 200 சதவீதம் உழைப்பை போட்டேன். அதற்கு என்னுடைய பயிற்சியாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால் அது என்னால் முடியாமல் போய்விட்டது. என்னுடைய முட்டி என் பளுவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதனை நோக்கி நான் தயாரானேன்.
அப்போது ஜெய்ஷா மற்றும் பிசிசிஐ யில் உள்ள சில நிர்வாகிகள், இல்லை வேண்டாம். பொறுமையாகவே திரும்பி வாருங்கள். உடல் நிலையில் அவசரம் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். ஜெய்ஷா போன்ற நபர் ஒவ்வொரு விஷயத்திலும் நம்மிடம் அக்கறை கொண்டால் நிச்சயம் அது ஒரு பெரிய துணையாக நமக்கு அமையும். உதாரணத்திற்கு நான் பெங்களூரில் ஹோட்டலில் தங்காமல் ஒரு வீடு எடுத்து தங்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்கும் பிசிசிஐ தான் ஏற்பாடு செய்து என்னை வீட்டில் தங்க வைத்தார்கள். ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு மனிதனாகவும் என்னை எப்படி முன்னேற்றக் கொள்வது என்பது குறித்து தான் நான் யோசித்தேன். என்னை பொறுத்தவரை ஐபிஎல் போட்டியில் நான் எந்த இலக்கையும் வைத்துக் கொள்ளவில்லை. எந்த நெருக்கடியும் இல்லாமல் களத்தில் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான் இருக்கிறது. டி20 உலக கோப்பையில் இடம் பெறுவேனா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது. என்னுடைய இலக்கெல்லாம் நான் களத்தில் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்று கூறியுள்ளார்.