ஒரு வாட்ஸ்அப் குரூப்.. லைட்டா வித்தியாசமான யோசனை.. சம்பாதித்து அசத்தும் வேலைக்கார பெண்
கடுமையான உழைப்பும், மன உறுதியும் இருந்தால் நாம் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றியை தேடித் தரும் என்பதற்கு உதாரணமாகி இருக்கிறார் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரியா சேத்ரி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். 24 வயதான அவர் கணவருடன் குருகிராமில் தங்கி வீட்டு பணிப்பெண் வேலை செய்து வருகிறார்.
கணவர் ஆபிஸ் பாயாகவும் மனைவி வீட்டு பணிப்பெண்ணாகவும் வேலை செய்து வருகின்றனர். அசாமில் இருக்கும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப வேண்டும், தங்களின் அன்றாட செலவை பார்க்க வேண்டுமென பொறுப்புகள் இருப்பதால் சம்பளம் பத்தாமல் தவித்து வந்தனர். சொந்த ஊரிலும் விலங்குகள் – மனித மோதல்கள் காரணமாக விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுவதால் அவர்களுக்கு பணம் அனுப்பியே ஆக வேண்டிய சூழல்.
இந்த நிலையில் தான், ராஷி சோமன் என்பவரின் வீட்டில் வேலைக்கு சென்ற போது அவர் கொடுத்த ஐடியா பிரியா சேத்ரியை தொழில் முனைவோராக்கியுள்ளது.குருகிராமில் தங்களின் குடியிருப்பு பகுதியில் ஃபிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்காமல் இருந்ததை அடுத்து டெல்லியில் இருந்து வாங்கி வந்து கொடுக்கும்படி ராஷி சோமன், பிரியாவிடம் கூறியுள்ளார்.
இது கூடுதல் வருவாய் கிடைத்த நிலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காய்கறி மற்றும் பழங்களை ஃபிரஷ்ஷாக வாங்கி வந்து விற்பனை செய்தார் பிரியா. தற்போது பிரியாவும் அவரது கணவரும் இணைந்து 30 விதமான பழங்கள் மற்றும் முந்திரி, பாதாம், போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். வேலைக்கு சென்றது போக மீதமுள்ள நேரத்தில் இந்த தொழிலை செய்வதால் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
காலை 5 மணிக்கே டெல்லி சென்று பழங்களை வாங்கி வருகின்றனர். அவற்றை பேக் செய்து வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர். இந்த தொழில் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்கின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு என வாட்ஸ் அப் குழுவை நிறுவி அதன் மூலமும் ஆர்டர் பெறுகின்றனர். சுமார் 250 வாடிக்கையாளர்களை பிடித்து தொடர்ச்சியாக காய்கறி , பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். கூகுள் படிவத்தை உருவாக்கி அதன் மூலமாகவும் வாடிக்கையாளர்களை பிடித்து வருகின்றனர்.
கூடுதல் வருமானத்தை அசாமில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவிக்கும் பிரியா, தொழிலை வளர்ப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் சிறந்த எதிர்காலம் அமையும் என நம்பிக்கை ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.