வேகமா டெலிவரி செய்றாங்களேன்னு பார்த்தா.. இதோ.. Zepto பிளாட்பார்ம் கட்டணம் போட்டுட்டாங்க பாருங்க!
இந்தியாவில் உணவு மற்றும் பலசரக்கு பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யக்கூடிய தளங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு தள்ளுபடிகள், இலவச டெலிவரி என சலுகைகளை வழங்கும் இத்தளங்கள் படிப்படியாக பல்வேறு கட்டணங்களை வசூலிக்க தொடங்குகின்றன. அந்த வகையில் மளிகை சாமான், பால் மற்றும் பிற பலசரக்கு பொருட்களை டெலிவரி செய்யும் ஸெப்டோ நிறுவனம் பிளாட்பார்ம் கட்டணத்தை வசூலிக்க தொடங்கியுள்ளது.
ஸெப்டோ நிறுவனம் ஒரு ஆர்டருக்கு 2 ரூபாய் என்ற அளவில் பிளாட்பார்ம் கட்டணம் வசூலிக்கிறது. வழக்கமாக உணவு டெலிவரி மற்றும் பிற ஈ-காமர்ஸ் தளங்கள் தான் பிளாட்பார்ம் கட்டணம் கேட்கும். ஸோமேட்டோ உணவு ஆர்டருக்கு பிளாட்பார்ம் கட்டணம் வசூலிக்கிறது ஆனால் பலசரக்கு பொருட்களை டெலிவரி ப்ளங்கிட் செயலியில் இந்த கட்டணம் கிடையாது, ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் செயலியிலும் இது போன்ற கட்டணம் கிடையாது.
ஆனால், உணவு டெலிவரி செயலிகளில் புக் செய்யும் நேரத்தை பொறுத்து பிளாட்பார்ம் கட்டணங்கள் 2 முதல் 10 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் பலசரக்கு டெலிவரி செயலிகளிலேயே முதன்முறையாக ஸெப்டோவில் இந்த கட்டணம் அறிமுகமாகியுள்ளது.
ஸெப்டோ ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் பல்வேறு கட்டணங்களை வசூலிக்கிறது. இரவு 11 மணிக்கு மேல் செய்யும் ஆர்டர்களுக்கு லேட் நைட் கட்டணம் 15 ரூபாய் பெறப்படுகிறது. இலவச டெலிவரியையும் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை. தற்போதைக்கு 5 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை டெலிவரி கட்டணம் பெறப்படுகிறது.
இதனிடையே பிளிங்கிட் , ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் செயலிகளும் இலவச டெலிவரியை கைவிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பிட்ட தொகையை டெலிவரி கட்டணமாக வசூலிக்க முடிவெடுத்து அதற்கான தொடக்க வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸெப்டோ நிறுவனம் , ரெலிஷ் என்ற கூடுதல் செயலியை அறிமுகம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிக்கன், மட்டன், மீன் வகைகளை டெலிவரி செய்யும் பிராண்டாக ரெலிஷ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளிங்கிட் மற்றும் இன்ஸ்டாமார்ட் நிறுவனங்கள் முறையே ஸொமேட்டோ, ஸ்விக்கியின் ஆதரவு இருக்கிறது. இதில் பலசரக்கு டெலிவரி சந்தையில் பிளிங்கிட் தான் பெரும்பாலான சந்தையை ஆக்கிரமித்துள்ளது. இந்த இடத்தை பிடிப்பதற்காக போட்டியை ஸெப்டோ தீவிரப்படுத்தியுள்ளது என்கின்றனர் BofAஇல் உள்ள ஆய்வாளர்கள். ஸெப்டோ பெரும்பாலும் குறைந்த டெலிவரி கட்டணம் வசூலிப்பதாகவும் கூறுகின்றனர்.
ஸெப்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஸெப்டோ பாஸ் என்பதை அறிமுகம் செய்துள்ளது. இதனை வாங்குபவர்களுக்கு இலவச டெலிவரி மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. முதல்கட்ட சோதனையின் போதே ஸெப்டோ பாஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 30% அதிகரித்தனர் என்பதால் அதை விளம்பரப்படுத்தி வருகிறது ஸெப்டோ.
இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிராண்டுகளில் பிளிங்கிட் 40% , இன்ஸ்டாமார்ட் 37 % மற்றும் ஸெப்டோ 20% என சந்தை பங்கு வைத்துள்ளன.