இந்த வேலைகளுக்கு AI போதும்.. “Job cut” அறிவிப்பை வெளியிட்ட ஐபிஎம்? வெளியான பரபர தகவல்
புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் நிறுவன ஊழியர்களை லே ஆஃப் என்ற பெயரில் பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஐபிஎம் நிறுவனமும் பணி கட் (job cut) அறிவிப்பை வெளியிட்டு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது என்று பல முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகெங்கிலும் பல்வேறு நிறுவனங்கள் மறு கட்டமைப்பு , சிக்கன நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஐபிஎம் நிறுவனம் பணி ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் இந்த முறையில் ஜாப் கட்- நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
ஐபிஎம்மின் சிறப்பு தகவல் தொடர்பு துறை அதிகாரியான ஜனார்த்தன் அதாஷிக் தனது துறை சார்ந்த ஊழியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய போது பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக ஐபிஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதையும் வெளியிடவில்லை ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் வாயிலாக பணிநீக்கம் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் கிருஷ்ணா, ஐபிஎம் நிறுவனம் செயற்கை நுண்ணறிவால் செய்யக்கூடிய வேலைகளுக்கு இனிமேல் ஆட்களை பணிக்கு எடுக்கப் போவதில்லை என்பதை அறிவித்திருந்தார். அது மட்டும் இன்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 விழுக்காடு பணிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு பணி நீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் அதாவது இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை 204 நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 50,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் ஐபிஎம் நிறுவனத்தின் சிறப்பு நிதி அதிகாரியான ஜேம்ஸ் கபாலி கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் நிறுவனம் மறு சீரமைக்கப்படும் என தெரிவித்திருந்தார் கடந்த ஆண்டு சுமார் 3,900 ஊழியர்கள் பணி நீக்கம் செய்தது.
இதனிடையே பணி நீக்கத்திற்கு ஊழியர்களே தாமாக முன் வந்து விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் ஐபிஎம் ஊழியர்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள பணியிடங்கள் இவ்வாறு காலி செய்யப்பட உள்ளன. 2023ஆம் ஆண்டு இறுதியில் ஐபிஎம் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 2.88 லட்சமாக இருந்தது.