கோலி, ரோகித் எல்லாம் கிடையாது.. சச்சினுக்கு பிறகு இவருக்கு மட்டும் தான் அன்பு கிடைத்தது- ரெய்னா
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நெருங்கு நெருங்க தோனி ரசிகர்கள் தற்போது தங்களுடைய ஆதிக்கத்தை சமூக வலைத்தளத்தில் காட்டத் தொடங்கி விட்டனர். சினிமாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமா? அஜித் ரசிகர்கள் அதிகமா? என்று அவ்வபோது பேச்சு வரும். அதை போல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழும்.
கிரிக்கெட்டில் கடவுளாகவே சச்சின் டெண்டுல்கரை ரசிகர்கள் பாவித்த நிலையில்,அதன் பிறகு தோனி பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தால் கொண்டாடப்பட்டார். தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கும் அதே அளவு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னாவிடம், எந்த வீரருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, நான் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் போது அவருக்கு ரசிகர்கள் எந்த அளவிற்கு அன்பு கொடுப்பார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.
அதன் பிறகு இந்திய அணியில் தோனிக்கு தான் அதே அளவு ரசிகர்களின் அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது. “MSD மகேந்திர சிங் தோனி என்ற பெயர் ஒவ்வொருவரின் இதயத்திலும் பதிந்து இருக்கிறது என்று ரெய்னா கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து பேசிய ஆர் பி சிங், தோனிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை கடந்த சீசனில் பார்க்கும்போது என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
ஏனென்றால் அது பல வருடங்களாக கட்ட அமைக்கப்பட்டிருக்கிறது. சிஎஸ்கே தொடங்கியதில் இருந்து தற்போது வரை தோனி பிரமாதமாக செயல்பட்டு இருக்கிறார். பல கோப்பைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டுதான் தோனி கடைசியாக விளையாடக்கூடிய தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதனால் பல ரசிகர்கள் இம்முறை தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆசைப்படுவார்கள். இதனால் ஐபிஎல் தொடரின் பார்வையாளர்களும் 30 சதவீதம் வரை உயரும் என்று நான் நினைக்கிறேன் என்று ஆர் பி சிங் கூறியுள்ளார். இதேபோன்று பார்த்தீவ் பட்டேல் பேசுகையில், ரசிகர்களின் அன்பை நான் இதுவரை மூன்று முறை பார்த்திருக்கிறேன்.
அதை போல் கடந்த ஆண்டு சென்னையில் தோனி பேசும்போது ஒரு ரசிகர் கூட மைதானத்தை விட்டு வெளியேறவில்லை. பிசிசிஐ இதுவரை நம்பர் 7 மற்றும் நம்பர் 10 ஆகிய ஜெர்சியை மட்டும் தான் இனி வேறு எந்த வீரருக்கும் கொடுப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் இவ்விரு வீரர்களுக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.