26-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைவடைந்தது.
இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 18-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 26-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.