டயட் வேண்டாம், ஜிம் வேண்டாம்: எடையை குறைக்க அட்டகாசமான 4 டிப்ஸ்
உடல் பருமன் என்பது பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகிவிட்டது. உடல் எடை மிக எளிதாக அதிகரித்து விடுகிறது. ஆனால் எடையை குறைப்பது மிக கடினமான ஒரு பணியாக இருக்கிறது. எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் அத்தனை எளிதாக உடல் எடையை குறைக்க முடிவதில்லை. கூடுதலாக வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பும் மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.
டயட்டிங் இருந்தால், அதாவது உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் உடல் எடையை குறைக்கலாம் (Weight Loss) என்று கூறப்படுகிறது. இருப்பினும் பிசியான வாழ்க்கை முறை மற்றும் இன்னும் சில காரணங்களால் நம்மில் பலரால் இதை சரியான முறையில் கடைபிடிக்க முடிவதில்லை.
எனினும் சில எளிய வழிகளில் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையையும் குறைக்க முடியும். இதற்கு நமது வாழ்க்கை முறையில் பல வித மாற்றங்களை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை நமது தினசரி வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தொப்பை கொழுப்பையும் குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம். அந்த எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
டயட்டிங்கில் இல்லாமல் உடல் எடை குறைப்பதற்கான வழிமுறைகள்
வெந்நீர்
வெந்நீரால் (Hot Water) நம் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைப்பதிலும் இது நமக்கு உதவியாக இருக்கும். எனினும் நாள் முழுவதும் வெந்நீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்க வேண்டும். வெந்நீர் குடித்த பின் குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு பிறகே எதையாவது உண்ண வேண்டும். வெந்நீரில் வெந்தயம் அல்லது சீரகத்தையும் ஊறவைத்து குடிக்கலாம். இந்த நீர் டீடாக்ஸ் நீராக செயல்படுகிறது. இது தவிர நாள் முழுவதும் ஏதாவது சாப்பிட்டால். சாப்பிட்டு 20 நிமிடம் கழித்து வெந்நீரை குடிப்பது நல்லது. இதன் மூலம் உடனடியாக கொழுப்பு எரிக்கப்படுகின்றது.
உணவின் அளவு
நாம் எவ்வளவு உணவு உட்கொள்கிறோம்? எப்பொழுது உட்கொள்கிறோம்? என்பது நமது உடல் எடையை நேரடியாக பாதிக்கிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவை உட்கொள்வது சரியல்ல. உணவின் அளவில் (Portion Control) கண்டிப்பாக கட்டுப்பாடு இருக்க வேண்டும். சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அளவுக்கு அதிகமான உணவை உட்கொள்வது தவறு. சரியான அளவில் உணவை உட்கொள்ளும் பொழுது நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவும் குறைகிறது. இதன் மூலம் அதிகப்படியான கொழுப்பும் எரியத் தொடங்குகிறது.
ஆரோக்கியமான காலை உணவு
காலை உணவு (Breakfast) நம் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிக முக்கியமானதாகும். பலர் காலை உணவை உட்கொள்வதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால், இது எடை அதிகரிப்புக்கு பெரிய காரணம் ஆகி விடுகின்றது. காலை உணவில் ஆரோக்கியமான நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வதால் உடல் சுறுசுறுப்புடனும் ஆற்றலுடனும் இருப்பதோடு எடை இழப்புக்கும் இது வழி வகுக்கிறது
நடைப்பயிற்சி
வேகமான எடை இழப்புக்கு நடைப்பயிற்சி (Walking) மிகவும் உதவியாக இருக்கும். சிலர் எதை சாப்பிட்டாலும் அதற்கு அரை மணி நேரம் கழித்து நடைப்பயிற்சியை மேற்கொள்வார்கள். இதற்கு நேரம் இல்லாதவர்கள் இரவில் ஒரு மணி நேரம் நடக்கலாம். இதன் மூலம் உடல் எடை குறைவதோடு தொப்பை கொழுப்பும் படிப்படியாக குறைகிறது. இது மட்டுமின்றி நடைப்பயிற்சி மூலம் இடுப்பு, தொப்பை, கை. கால் என அனைத்து இடங்களில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பும் விரைவாக கரைகிறது.