இந்த 3 ஜூஸ்களை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்!
வெற்று வயிற்றுக்கு சிறந்த சாறு: நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க விரும்பினால், காலையில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதனால், காலையில் முதலில் என்ன சாப்பிட வேண்டும் அல்லது குடிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால், உங்களின் முழு நாள் ஆரோக்கியத்தை இந்த உணவுகளே தீர்மானிக்கிறது.
பல சுகாதார நிபுணர்கள் ஆரோக்கியமான ஜூஸ்களுடன் தினமும் நாளைத் தொடங்குகின்றனர். ஏனெனில் கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு என்பது அதீதமாக இருக்கும். இதனை தவிர்க்கும்பொருட்டு காலை மற்றும் இரவு நேரங்களில் பழச்சாறுகளை கட்டாயம் எடுத்துக் கொள்வது உடலின் சமச்சீர் தன்மையை நிலைநாட்டும்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் நீர் உங்கள் செரிமானத்தை அதிகரிக்க உதவும் ஒரு சரியான ஹைட்ரேட்டர் ஆகும். உங்கள் ஆற்றலை அதிகரிக்க உங்கள் காலை உடற் பயிற்சிக்கு முன் இதைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நெல்லி இஞ்சி ஜூஸ்
கோடையில் நீர்ச்சத்து குறைந்து நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும் இந்த காலத்தில் காலையில் தினமும் 1 டீஸ்பூன் இஞ்சி சாறுடன் நெல்லிச்சாறை கலந்து 30 மில்லி எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இரத்த சர்க்கரை அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த ஜூஸ் சிறந்தது.
சுரைக்காய் ஜூஸ்
இரவில் வெகுநேரம் விழித்திருந்து உணவு அருந்தினால், காலையில் வயிற்று உப்புசம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், எழுந்தவுடன் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது இயற்கையாகவே குளிர் மற்றும் காரத்தன்மை கொண்டது.