டாடா பஞ்ச் கார் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் வருது
டாடா நிறுவனத்தின் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் வரும் தீபாவளிக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் முதல் முறையாக இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனத்தின் கார்களிலேயே சிறப்பாக விற்பனையாகும் காராக பஞ்ச் கார் தான் இருக்கிறது. இந்திய மக்கள் மத்தியில் இது மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. தற்போது மைக்ரோ எஸ்யூவி செகண்ட் மீது மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் இந்த கார் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. கடந்த மாதம் மட்டும் 18000 கார்கள் மொத்தமாக விற்பனையாகி உள்ளன.
இந்த கார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் முதன்முதலாக அறிமுகமானது. அதன் பின்பு சின்ன சின்ன அப்டேட்கள் தான் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த காரின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் தயாராகி வந்தது. இந்த ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் தற்போது சோதனையில் இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த கார் இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்ச் கார் விற்பனைக்கு அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் ஆவதால் அதன் பின்னர் தொழில்நுட்பத்திலும் மக்கள் விருப்பத்திலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் அந்த காரை டாடா நிறுவனம் புதிதாக அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன.
டாடா நிறுவனம் சமீபத்தில் தான் தனது எஸ்யூவி கார்களான நெக்ஸான், ஹாரியர், சஃபாரி, பஞ்ச் இவி உள்ளிட்ட கார்களை அப்டேட் செய்தது மேலும் டாடா நிறுவனத்தின் புதிய கார்களின் வடிவமைப்பு முற்றிலுமாக புதிதாக மாற்றப்பட்டு விற்பனைக்கு விரைவில் அறிமுகமாக உள்ளது. டாடா பஞ்ச் இவி கார் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட போதே டாடா பஞ்ச் காரும் விரைவில் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது வெளியான ஸ்பை புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இந்த கார் முழுமையாக மறைக்கப்பட்ட வகையில் இருந்தது. இருந்தாலும் சில முக்கியமான தகவல்களை நம்மால் பார்க்க முடிந்தது. இந்த காரின் முன் பகுதியில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டாடா நிறுவனத்தின் புதிய டிசைன் இந்த காரில் இடம் பெற்றுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
காரின் பக்கவாட்டு பகுதியில் எந்த வித மாற்றங்களும் செய்யப்படாமல் தற்போது உள்ள கார் போலவே இருக்கிறது. புதிதாக அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின்பக்கத்தை பொறுத்தவரை சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பின்பக்கமும் புதிய பம்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை 2 ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காரின் டேஷ்போர்டு வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் 6 ஏர் பேக்குகள் இஎஸ்பி உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 85 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முதல் முதலாக சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால் பெரிய அளவில் அப்டேட் எதுவும் இல்லை.