பொம்மை கார் போல மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை வாங்குறாங்க!! வீட்டுக்கு வீடு ஒரு ஸ்கார்பியோ கார் நிற்க போகுது!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றியும், கடந்த மாதத்தில் ஒவ்வொரு மஹிந்திரா காரும் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும் இனி பார்க்கலாம்.
இந்தியாவில் 4வது மிக பெரிய கார் நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. மற்ற முன்னணி கார் நிறுவனங்களை போன்று, மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் மஹிந்திரா கார்கள் விற்பனை சுமார் 40% அதிகரித்துள்ளது.
அதாவது, 2023 பிப்ரவரியில் வெறும் 30,221 மஹிந்திரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 42,401 மஹிந்திரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டால், பிப்ரவரி மாதத்தில் சில நூறு மஹிந்திரா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஏனெனில், இந்த ஆண்டின் முதல் ஜனவரி மாதத்தில் 43,068 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. மஹிந்திராவின் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு ஸ்கார்பியோ மற்றும் பொலேரோ கார்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் 10,000 யூனிட்களுக்கு மேல் விற்பனையான மஹிந்திரா கார்கள் ஸ்கார்பியோ மற்றும் பொலேரோ ஆகும்.
மஹிந்திரா பொலேரோ கார்களின் விற்பனை கடந்த சில வருடங்களாகவே ஒரே சீராக உள்ளது. ஆனால், ஸ்கார்பியோ கார்களின் விற்பனை கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போதைக்கு, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் டாப்-10 கார்கள் என்று எடுத்து பார்த்தால், அது ஸ்கார்பியோ ஒன்றாக இருக்கும். கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் சுமார் 15,051 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெறும் 6,950 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது சுமார் 117% அதிகரித்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் கூட சற்று குறைவாக 14,293 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இந்தியாவில் ஸ்கார்பியோ கார்கள் இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், ஸ்கார்பியோ-என் 2022 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே ஸ்கார்பியோ கார்கள் விற்பனை புதிய உச்சத்தை தொட ஆரம்பித்தது. ஸ்கார்பியோ கார்களுக்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட 2வது மஹிந்திரா காராக பொலேரோ உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பொலேரோ கார்களின் எண்ணிக்கை 10,113 ஆகும்.
2023 பிப்ரவரி மாதத்தில் 9,782 பொலேரோ கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. ஸ்கார்பியோ, பொலேரோ இவை இரண்டு மட்டும் இல்லாமல், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 6,546 எக்ஸ்யூவி700 கார்கள், 5,812 தார் வாகனங்கள், 4,218 எக்ஸ்யூவி300 கார்கள், 610 எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார்கள் மற்றும் 51 மராஸ்ஸோ எம்பிவி கார்களையும் மஹிந்திரா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.