தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்! 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்!
இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தமிழ்நாடு அரசுடன் புதன்கிழமை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி ரூ.9,000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்வதை உறுதி செய்துள்ளது.
டாடா மோடார்ஸ் நிறுவனத்தின் முதலீடு குறித்து மாநில தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், நவீன வாகன உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது என்றும் இதன் மூலம் 5,000 பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மற்றொரு பெரிய நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழகத்தில் ரூ.16,000 கோடி முதலீட்டை அண்மையில் அறிவித்தது. இது வாகன உற்பத்தித் துறையில் கடந்த இரண்டு மாதங்களில் தமிழ்நாடு ஈர்த்துள்ள இரண்டாவது மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.
“தொழிற்சாலைகளை மட்டும் உருவாக்கப் போவதில்லை; பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி பொறியியல் ரீதியான கனவுத் திட்டம் இதன் மூலம் விரைவுபடுத்தப்படும்” என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடத்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அதானி குழுமம் ரூ.24,500 கோடி, சிபிசில் நிறுவனம் ரூ.17,000 கோடி, எல் அண்டு டி நிறுவனம் ரூ.3500 கோடி, ராயல் என்ஃபீல்டு ரூ.3,000 கோடி, மைக்ரோசாப்ட் இந்தியா ரூ,2740 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.