இந்தியாவில் எங்கு திரும்பினாலும் ஐபோன் மயம்.. இந்த மாபெரும் வெற்றிக் காரணம் இவர் தான்..?
ஸ்மார்ட்போன் பிரிவில் ஆப்பிள் ஐபோன்களுக்கு நிகர் இல்லை என்றால் இன்று பலருக்கும் சண்டைக்கு வருவார்கள், ஆனால் விற்பனையிலும், பிராண்ட் மதிப்பிலும் ஆப்பிள்-ஐ முந்த யாரும் இல்லை என்றால் ஓப்புகொள்ள தான் வேண்டும்.
ஸ்மார்ட்போன்களில் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி நம்பகமான ஒரு பிராண்டாக இருக்கிறது ஆப்பிள். இதனாலேயே ஐபோன் விற்பனை அதன் அறிமுக நாளில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐபோன்கள் பயன்பாடு என்பதே தனி கெத்து தான் மக்களை உணர வைத்து பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் 5 வருடத்திற்கு முன்பு ஐபோன் வைத்திருந்தால் கெத்து என நிலை மாறி, தற்போது 5ல் 3 பேர் ஐபோன் வைத்திருக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. அத்தகைய ஐபோன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு காரணமானவர் ஆஷிஷ் சவுத்ரி..
ஆஷிஷ் சவுத்ரி 1965 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் கணிதவியல் முடித்த இவர் அமெரிக்கா சென்று எமோரி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார் . பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தொழில் மேலாண்மை முடித்தார். இவர் தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருக்கிறார்.
ஆஷிஷ் சவுத்ரிடின் தலைமையின் கீழ் ஆப்பிள் நிறுவனம் 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் 40,000 கோடி மதிப்பிலான ஃபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. சீனாவில் ஏற்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்குமுறை பிரச்சனைகளை அடுத்து ஆப்பிள் நிறுவனம் தனது கவனத்தை இந்தியாவின் மீது திருப்பியது.
இந்தியாவில் ஆப்பிள் போன்கள் தயாரிக்கும் ஆலைகளை நிறுவி பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி என்பது முதன்முறையாக 10 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்கள் பிரிட்டன், இத்தாலி ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ஆப்பிள் இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய ஆஷிஷ் சவுத்ரி.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன ஃபோன்களின் உற்பத்தி என்பது 1% என்று தான் இருந்தது ஆனால் தற்போது 5% ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிள் நிறுவனத்தின் 30% அதிகமான போன்கள் இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் இந்தியாவின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பவர் ஆஷிஷ் சவுத்ரி. கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் ஆப்பிள் இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்றார். அதற்கு முன்பு அவர் நோக்கியா நிறுவனத்தில் சிறப்பு வாடிக்கையாளர் செயல்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். 2023 ஆம் ஆண்டில் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றுக்கான வைஸ் பிரசிடெண்ட் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது நேரடி ஸ்டோர்களை திறந்தது மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி ஸ்டோர்கள் செயல்படுகின்றன. மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோர் இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் செயல்படுகிறது.
வாடகையாக மட்டும் இந்த கடை மூலம் மாதந்தோறும் 42 லட்சம் ரூபாயை அம்பானிக்கு வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி கடையில் கிடைக்கும் வருவாயில் 2% அம்பானிக்கு செல்கிறது. ஆஷிஷ் சவுத்ரி அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ஐபோன் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் அதிக ஸ்டோர்களை நிறுவுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.