டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா, ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்தியா, ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
அதன்படி, இரு அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அண்மையில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி அதே வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்புடன் இன்று களமிறங்குகிறது.
அதேநேரம், சொந்த மண்ணில் இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்க ஆஸ்திரேலிய அணி கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அதில் 4 போட்டிகளில் தோல்வியும், 6 போட்டிகளில் டிராவும் கண்டுள்ளது.
இரு அணிகளும் இந்திய மண்ணில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளும் டிராவில் முடிவடைந்தன. இந்நிலையில், 1984ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது.