சர்ப்ரைஸ்! கச்சா எண்ணெய் 80 டாலருக்கு கீழ் குறையவில்லை, ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் சரிவு!
ஒரு முறை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் என மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேட்ட போது கச்சா எண்ணெய் 80 டாலருக்குக் கீழ் குறையும் போது இந்தியாவில் எரிபொருள் விலை குறையும் என கூறினார்.
ஆனால் தற்போது WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 81.38 டாலர், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 85.48 டாலர். ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் வாங்கிய கச்சா எண்ணெய் நிறுத்தப்பட்டு 2 மாதங்களானது.
சமீபத்தில் கூட இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விற்கப்படும் டீசலில் லாப அளவுகள் பெரிய அளவு குறைந்துள்ளது என தகவல் வெளியானது, இந்த நிலையில் திடீரென பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் குறைந்துள்ள பலரையும் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (OMCs) நாடு முழுவதும் விலையை மாற்றியமைக்க முடிவு செய்த பின்னர், மார்ச் 15 வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று இந்திய பெட்ரோலிய அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2 ரூபாய் குறைத்துத் திருத்தியுள்ளதாகவும், புதிய விலைகள் 15 மார்ச் 2024, 06:00 காலை முதல் அமலுக்கு வரும் என்று டிவிட்டல் பதிவில் பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்புதிய வி்லை விலை திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, தேசிய தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹96.72 ரூபாயில் இருந்து 94.72 ரூபாயாக குறைய உள்ளது. இதேபோல் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் விலை லிட்டருக்கு ₹104.21 ஆகவும், ₹103.94 ஆகவும், ₹100.75 ஆகவும் முறையே குறைகிறது.
டீசல் விலை தேசிய தலைநகர் டெல்லியில் லிட்டருக்கு ₹87.62 ஆகவும், மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் முறையே லிட்டருக்கு ₹92.15 ஆகவும், ₹90.76 ஆகவும், ₹92.34 ஆகவும் குறைய உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள், 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்களின் இயக்க செலவுகளைக் குறைக்கும். இதன் மூலம் மக்களின் மக்களின் செலவுகள் குறையும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தனது பதிவில் கூறியுள்ளது.