எதிரிகளை நிர்மூலமாக்கும் வாராஹி அம்மன்! வெற்றிபெற வழிபாடு! எப்படி எப்போது எவ்வாறு?
சுக போகங்களின் அதிபதியான சுக்ர பகவான், இன்பத்தை அருள்பவர்.அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடிய சுக்கிரன், சிற்றின்பம், திருமணம் என சுகத்தை அளிப்பவர். மார்ச் 7ஆம் தேதி காலை 10:55 மணிக்கு சுக்கிரன் கும்பத்தில் பெயர்ச்சி அடைந்தார். சுக்கிரன், மார்ச் 30ஆம் தேதி வரை அங்கு இருந்து அருள் புரிவார். இந்த காலகட்டத்தில் வாராஹி அன்னையை பஞ்சமி திதியில் வழிபட்டால் மிகவும் நல்லது, எதிரிகளை வென்று வெற்றி வாகை சூடலாம்.
சப்த கன்னிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக திகழும் வராஹி அம்மன் சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக போற்றப்படுகிறார். வாழ்வின் பஞ்சங்களைப் போக்கும் வாராஹி அம்மனை சரியான முறையில் விரதமிருந்து வழிபட்டால் பக்தர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வாழ்வில் வளங்களை அருளும் சுக்கிரனுடைய அனுகிரகத்தை பெற வேண்டுமெனில், வாராஹி அம்மன் வழிபாட்டை சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளன்று செய்வது நல்லது. சுக்கிரனுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளும் வெள்ளிக்கிழமை என்பதால், வாராஹி அம்மனை, வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வளம் பெறலாம்.
வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வாராஹி அன்னையை வழிபடுவதால் நன்மைகள் கிடைக்கும் என்றால், மாலை நேரத்தில் வரும் சுக்கிர ஹேரையில் வழிபாடு செய்வது மேலும் சிறப்பு.
வெள்ளிக்கிழமை வாராஹி அம்மன் வழிபாடு
பூஜைக்கு தேவையானவை: மொச்சை பயறு, தாமரை மலர் மற்றும் பூஜைக்கு தேவையான பூக்கள், பஞ்ச தீப எண்ணெய், சாம்பிராணி, கற்பூர ஆரத்தி, ஆரத்தி
பிரசாதம்
மொச்சையை ஊற வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மொச்சையுடன் தேன் கலந்து அதை வாராகி அன்னைக்கு இனிப்பு நிவேதனாக தயாரித்துக் கொள்ளவும்
தாமரை மலர்
மகாலட்சுமி அன்னைக்கு பிடித்தமான தாமரை மலரை அவரது கையில் எப்போதும் பார்க்கலாம். அன்னை லட்சுமியின் திருக்கரங்களில் இருக்கக் கூடிய தாமரை மலரை, வாராகி அன்னைக்கு சூட்ட வேண்டும்.
தீப வழிபாடு
வாராகி அன்னைக்கு உகந்த பஞ்ச தீபத்தையும் ஏற்றி வணங்க வேண்டும். அதன்பிறகு, சாம்பிராணி போட்டு, கற்பூர ஆரத்தி போன்றவற்றை காட்டுங்கள். பூஜை செய்யும்போது, வாராகி அன்னையின் மந்திரங்களை பாராயணம் செய்வது நல்லது. அதேபோல, மகாலட்சுமி மந்திரம், லட்சுமி அஷ்டோத்திரம் என மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்யுங்கள்.
வெள்ளிக்கிழமை வழிபாடு பலன்கள்
வெள்ளிக்கிழமை தோறும் வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபாடு செய்து வரும் பொழுது குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து இருக்கும். கடன் தொல்லை, பண பிரச்சனை என பண நெருக்கடி உங்களை நெருங்கக் கூட முடியாது.
சுக்கிரனின் அருள் ஆசி பூரணமாக கிடைக்கும் என்பதைப்போலவே, லட்சுமி அன்னையின் அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கும் வாராகி அன்னையின் அருளாசியால் எல்லா துன்பங்களும் நீங்கி, சுக்கிரன் மற்றும் மகாலட்சுமி அன்னையின் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.