இன்று முதல் அமல் : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு..!
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 குறைத்து அறிவித்துள்ளது.
கடைசியாக 2022, மே 21ம் தேதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.9, டீசலில் லிட்டருக்கு ரூ.7.50 குறைத்தது. அதன்பின் 663 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்ததன் மூலம், இந்த தேசத்தின் ஒப்பற்ற பிரதமர் மோடி, மக்களின் நலன், கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களின் நலன்தான் பிரதான நோக்கம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 15ம் தேதி காலை முதல் அமலுக்கு வருகிறது.
மார்ச் 14ம் தேதி நிலவரப்படி, ரூபாய் மதிப்பில் இந்தியாவில் பெட்ரோல் லிட்டர் ரூ.94 ஆக இருக்கிறது. இதுவே இத்தாலியில் ஒரு லிட்டர் ரூ.168ஆகவும், பிரான்ஸில் ரூ.166.87ஆகவும், ஜெர்மனியில் ரூ.159ஆகவும், ஸ்பெயினில் ரூ.145ஆகவும் இருக்கிறது. இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலையைவிட இத்தாலியில் 79% அதிகமாகவும், பிரான்ஸில் 78%, ஜெர்மனியில் 70%, ஸ்பெயினில் 54% அதிகமாகவும்இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பேசிய ஹர்திப் பூரி பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு குறைக்க வாய்ப்பில்லை. சர்வதேச சந்தையில் கடும் விலைஊசலாட்டம் நிலவுகிறது என்று தெரிவித்தார். ஆனால், தேர்தல் நெருங்கியவுடன், பெட்ரோல், டீசல் விலை மக்களின் நலனுக்காக குறைக்கப்பட்டதாக ஹர்திக் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால், நுகர்வோர் செலவிடும் அளவு அதிகரிக்கும்.58 லட்சம் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் டீசலில் இயக்கப்படுகின்றன, 6 கோடி கார்கள், 27 கோடி இரு சக்கர வாகனங்கள் பயன்பெறும்.