தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் அதிக நிதி பெற்ற கட்சி எது தெரியுமா ? திமுகவிற்கு 6 ஆவது இடம்..!

எஸ்பிஐ வங்கி சார்பில் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து 2024ம் ஆண்டுவரை வழங்கப்பட்ட தேர்தல் நிதிப்பத்திரங்கள் 2 பிரிவுகளாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

முதல் பகுதியில் 360க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாகவும், 2வது பகுதி 426 பக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த தேர்தல் நிதிப் பத்திரங்களில் எந்தெந்த நிறுவனங்கள் தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கின, எவ்வளவு தொகைக்கு வாங்கின என்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்பகுதியில் 2019ஏப்ரல்1ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதி வரை 22,217 தேர்தல் நிதிப்பத்திரங்களை எஸ்பிஐ வங்கியிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.

2வது பகுதியில், தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய அ ரசியல் கட்சிகளின் பெயர்கள், அவர்கள் பணமாக்கிய தொகை தரப்பட்டுள்ளது. 2019, ஏப்ரல்1 முதல் 2024 பிப்ரவரி வரை 22,030 பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் பணமாக்கியுள்ளன.

இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் விவரங்களில் முத்தூட் பைனான்ஸ், சன்ஃபார்மா,வேதாதாந்தா லிமிடெட், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஹோல்டிங் அன்ட் இன்வெஸ்ட்மென்ட், பார்தி ஏர்டெல்,பினோலக்ஸ் கேபிள்ஸ்,லட்சுமி நிவாஸ் மிட்டல், இசிஎல் பைனான்ஸ், ஃபோர்ஸ்மோட்டார்ஸ், ஐடிசி, சியட், டாக்டர் ரெட்டிஸ் லேப், எம்ஆர்எப், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், டொரன்ட் பவர், பியூச்சர் கேமிங் அன்ட்ஹோட்டல் சர்வீஸ், ஜேகே சிமெண்ட் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியுள்ளன.

இந்நிலையில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனையில் அனைத்துக் கட்சிகளைவிட அதிகமாக பாஜக ரூ.6ஆயிரத்து 60.5 கோடி நிதி பெற்றது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த தேர்தல் நிதிப் பத்திரங்கள் மதிப்பில் 47.5% பாஜக பெற்றுள்ளது.

2வதாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்த தேர்தல் நிதியில் 12.6% அதாவது ரூ.1,609.50 கோடி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 11.1% அதாவது ரூ.1,421.9 கோடி பெற்றுள்ளது. இந்த 3 கட்சிகளும் சேர்ந்து, ஏறக்குறைய 71 சதவீதம் நிதியைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் இதற்குமுன் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 9.51 சதவீதம் அதாவது ரூ.1214.70 கோடி நிதி பெற்றுள்ளது. ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி ரூ.775.50(6.07%) கோடியும், தமிழகத்தில் திமுக ரூ.639 கோடியும்(5%) பெற்றுள்ளன.

அஇஅதிமுக கட்சி ரூ.6.10 கோடி(0.05%) மட்டுமே பெற்றுள்ளது. இதில் பிஜூ ஜனதா தளம், திமுக, பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் ரூ.500 கோடிக்கும் அதிகமாக தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக நிதி பெற்றுள்ளன.

தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ரூ.43.50 கோடியும், சமாஜ்வாதிக் கட்சி ரூ.14.10 கோடியும், பீகாரின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ரூ.14.10 கோடியும் நிதி பெற்றுள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *