இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில், பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க. ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை)காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு பிரதமர் செல்கிறார்.

பின்னர் அவர் அங்கு இருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரி மைதானத்தில் நடக்கும் பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும், பாரதிய ஜனதாவுடன் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாரும் கலந்து கொள்கின்றனர்.

நண்பகல் 12.15 மணி வரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர் மோடி, அதன் பின் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நடப்பாண்டு 5-வது முறையாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குமரியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கன்னியாகுமரிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை, ஹெலிகாப்டர் தளம், பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *