IPL 2024 : ஆண்டர்சனுக்கு மட்டுமல்ல.. இனி எந்த பவுலராக இருந்தாலும் அப்படிதான்.. ஜெய்ஸ்வால் வார்னிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 700 ரன்களுக்கும் அதிகமாக குவித்து தொடர் நாயகன் விருது வென்றது குறித்து இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 9 இன்னிங்ஸ்களில் 712 ரன்களை விளாசி அசத்தியுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். 2 இரட்டை சதம், மூன்று அரைசதம் என்று ஜெய்ஸ்வால் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே வியக்க வைத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே எண்ணற்ற சாதனைகளை படைத்து ஜெய்ஸ்வால் அசத்தியுள்ளார்.
இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசுகையில், எப்போதும் வெற்றி, தோல்விகளை தலைக்கு ஏற்றி கொள்ள மாட்டேன். ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டு என்பதே ஒவ்வொரு நாளும் மாறக் கூடியது. வெற்றியை கொண்டாடும் வழக்கம் உள்ளது. அதேபோல் தோல்வியின் போது எங்கு தவறு செய்தேன் என்று ஆராய்ந்து கற்றுக் கொள்வேன். வலைபயிற்சியில் அதிக நேரங்களை செலவிடுவேன். எனக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடித்த ஒன்று. அதனால் அதிகமாக விளையாட விரும்புவேன்.
ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 100 சதவிகித திறனையும் வெளிப்படுத்த வேண்டு8ம். எப்போதெல்லாம் வலைபயிற்சியில் சிறப்பாக பவுலிங் செய்கிறேனோ, அப்போதெல்லாம் என்னால் நன்றாக தூங்க முடியும். நேரம் தவறாமை, ஒழுக்கம் மற்றும் சீராக பணியாற்றுவது ஆகியவற்றை பின்பற்றி வருகிறேன். 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கு நிச்சயம் நல்ல தூக்கமும், உணவும் முக்கியம். அதனால் சிறிய இடைவேளை கிடைத்தால் கூட, எதையும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.
ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய களமிறங்கும் போதும், ஆட்டத்தை கடைசி வரை முடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருக்கும். இந்திய அணிக்காக வெற்றியை தேடிக் கொடுக்க வேண்டும். அதேபோல் எனது அதிரடி பேட்டிங்கிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 3 முதல் 4 ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுள்ளேன். எப்போது வேண்டுமானாலும் அங்கு சென்று பயிற்சி மேற்கொள்ள முடியும். அதெபோல் கடந்த 9 மாதங்களாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவருடனும் பணியாற்றி வருகிறேன். எனது முன்னேற்றங்களுக்கு அனைவருமே காரணம்.
எனது ஆட்டம் குறித்து இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் கூறிய கருத்து பற்றி பேச விரும்பவில்லை. என்னால் களத்தில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ, அதனை எப்போதும் செய்ய விரும்புகிறேன். ஆண்டர்சன் போன்ற ஜாம்பவான் பந்தில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்ததில் மகிழ்ச்சி தான். அந்த ஷாட்கள் அனைத்தும் ஏற்கனவே என் மனதில் இருந்தவை. பேட்டிங்கில் ஓரளவிற்கு நன்றாக செட்டாகிவிட்டால், என்னால் நிச்சயம் விளாச முடியும். அந்த நேரத்தில் பேட்டிங்கில் சிறந்த மனநிலையுடன் இருந்தேன். அப்படியொரு நேரத்தில் ஆண்டர்சன் மட்டுமல்லாமல், யாராக இருந்தாலும் விளாச முடியும் என்று தெரிவித்துள்ளார்.