இந்தியாவில் ஒரே வேகத்தில் வண்டியை ஓட்டினால் விபத்து தான் ஏற்படும்.. இங்கிலாந்தை கலாய்த்த அஸ்வின்
இந்திய மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து அணி வீணடித்து விட்டதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி, முகமது சமி, கே எல் ராகுல் போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் வீரர்களை வைத்துக் கொண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர், அஸ்வின் இங்கிலாந்து எந்த விஷயத்தில் தவறு செய்தது என்பது குறித்து பேசி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்ல நீங்கள் எந்த விதமான கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டாலும், நீங்கள் ஒரே வேகத்தில் விளையாடக் கூடாது. தொடர்ந்து ஒரே மாதிரியாக அடித்து விளையாடினால் நிச்சயம் நீங்கள் ஆட்டம் தான் இழ்ப்பீர்கள்.
உதாரணத்திற்கு நெடுஞ்சாலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வண்டியை ஓட்டுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இங்கிலாந்தில் கார் ஓட்டுவது என்பது ஒரு ஆசீர்வாதம் தான். ஏனென்றால் நீங்கள் வண்டியை தாராளமாக ஒரே வேகத்தில் ஓட்டலாம். உங்களுக்கு குறுக்கே வேறு யாரும் வர மாட்டார்கள். நம் யாரையும் ஓவர் டெக் செய்ய தேவையில்லை.
கார் ஓட்டும்போது யாராவது குறுக்கே வந்து விடுவார்களோ என்ற பயமும் தேவையில்லை. ஆனால் இந்தியாவில் அப்படி கிடையாது. இந்தியாவில் ஒட்டும் போது நீங்கள் ஒரே வேகத்தில் வண்டியை இயக்க முடியாது. நீங்கள் அடிக்கடி கியரை மாற்ற வேண்டியது வரும். எப்போதுமே ஒரு காலை பிரேக்கில் வைத்திருக்க வேண்டும்.
இந்திய சாலைகளில் இங்கிலாந்தால் நிச்சயம் வண்டியை ஓட்ட முடியாது. இது தான் இங்கிலாந்து பேட்டிங்களும் நடந்தது. ஜாக் கிராலி போன்ற வீரர்கள் அதிரடியாக அடிக்க தொடங்கியவுடன், அவர்கள் ஒரே வேகத்தில் விளையாட ஆசைப்பட்டு ஆட்டம் இழந்து விட்டார்கள்.பேஸ் பால் என்ற யுக்தி எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது தான். ஆனால் இவர்கள் அதிரடியாக ஆட தொடங்கிய பிறகு எங்களை அழுத்தத்தில் வைத்திருந்தார்களா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.
அவர்கள் அப்படி செய்திருந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கும். அனுபவ வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியை வீழ்த்த அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு அடுத்தடுத்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்தார்கள். இதே போல் பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணுக்கு சென்று வீழ்த்தினார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் அவர்கள் பெற்ற தோல்வியில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று அஸ்வின் கூறியுள்ளார்.