டாடா டெக்னாலஜிஸ் COO ஆக தமிழ் பெண் நியமனம்.. யார் இந்த சுகன்யா சதாசிவன்..?
டாடா குழுமத்தின் குளோபல் இன்ஜினியரிங் மற்றும் ப்ராடெக்ட் டெவலப்மென்ட் டிஜிட்டல் சேவை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் அதன் தலைமை இயக்க அதிகாரியாக சுகன்யா சதாசிவனை நியமிப்பதாக வியாழக்கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து யார் இந்த சுகன்யா சதாசிவன் என்ற கேள்விக்கு எழுந்துள்ளது. இதை விட முக்கியமாக டாடா குழுமத்தில் சமீபத்தில் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் டாடா டெக்னாலஜிஸ் என்பதால் முதலீட்டாளர் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சுகன்யா சதாசிவன்?: தமிழ்நாட்டில் பிறந்த சுகன்யா பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சையின்ஸ் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். ஐடித் துறையில் மட்டுமே சுமார் 33 வருடங்களுக்கு அதிகமான பணியாற்றியுள்ளார் சுகன்யா சதாசிவன்.
சுகன்யா சதாசிவன் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புதிய பதவியில் முதன்மையாக டெலிவரி மற்றும் ஆப்ரேஷன்ஸ் செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார். இதை தாண்டி உள் டிஜிட்டல் மற்றும் ஐடி அமைப்புகளுடன் இணைந்து நிறுவனத்தின் சேவை மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்கு தயார்ப்படுத்துவார் என்று டாடா டெக்னாலஜிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்குச் சேவைத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அறிவையும் அனுபவத்தையும் கொண்டு வந்துள்ளார் சுகன்யா சதாசிவன். இதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் (TCS) பல்வேறு மூத்த தலைமைத் திறன்களில் பணியாற்றியுள்ளார்.
டாடா டெக்னாலஜிஸில் சேருவதற்கு முன்பு, சுகன்யா அவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவர் மற்றும் தலைமை தகவல் அதிகாரி பதவியை வகித்தார். டிசிஎஸ் நிறுவனத்தின் மூலோபாய மாற்ற முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.
டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் காலை முதல் உயர்வுடன் காணப்பட்ட நிலையில் 2.45 மணிக்கு திடீரென சரியை துவங்கியது. இதன் வாயிலாக டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் 0.10 சதவீதம் சரிந்து 1050.10 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது.