சென்செக்ஸ் சரிவு..15 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி சந்தித்த ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகள்..காரணம் என்ன?

மும்பை: மார்ச் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான வாரம் இந்திய பங்குச்சந்தைகளுக்கு மோசமானதாக அமைந்துவிட்டது. குறிப்பாக ஸ்மால் கேப் , மிட் கேட் நிறுவன பங்குகளில் ஏற்பட்டிருக்கும் திருத்தம் ஒட்டுமொத்த பங்குச்சந்தையையே பாதித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இந்திய பங்குச்சந்தையில் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் 5% சரிவை கண்டன. இதனால் லட்சக்கணக்கான பணத்தை இழந்து முதலீட்டாளர்கள் தவித்தனர், பங்குச்சந்தை புள்ளிகளும் சரிந்தன.

வியாழக்கிழமை சற்றே மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சரிவிலேயே முடிவடைந்தன. சென்செக்ஸ் கிட்டதட்ட 600 புள்ளிகள் வீழ்ந்து 72,500க்கு கீழ் சென்றது, அதே போல நிப்டி 22,000க்கு கீழ் சென்றது. இரண்டுமே சுமார் 2% வீழ்ச்சி அடைந்தன. அக்டோபர் மாதத்திற்கு பின்பு இந்திய பங்குச்சந்தைக்கு இது மோசமான வாரமாக அமைந்துவிட்டது.

வெள்ளிக்கிழமை ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகள் தலா 1% வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த ஒரு வாரத்தில் மட்டும் 6.3% சரிவை கண்டு 15 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளன.

ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகள் பிரிவில் மிகைப்படுத்தல் காரணமாக மதிப்பீடுகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன, இது எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சி அடையும் என அண்மையில் செபி தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஸ்மால் கேப் பங்குகளில் செய்யும் முதலீட்டின் அபாயம் குறித்து முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதனை அடுத்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக பங்கு சந்தை வீழ்ச்சி கண்டது.

சர்வதேச காரணிகளும் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டன. அமெரிக்க மத்திய வங்கியின் கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. வட்டி விகிதங்கள் தொடர்பாக இந்த குழு விவாதிக்க இருக்கும் நிலையில் அந்த அச்சமும் இந்திய பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டது.ஆசிய சந்தைகளே சரிவால் தான் முடிவடைந்துள்ளன. குறிப்பாக ஜப்பான் பங்குச்சந்தை 1.1% என குறைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த நிறுவனங்கள் பெரும்பாலான பங்குகளை விற்றுவிட்டன. நிதியாண்டு முடிவது, பங்குச்சந்தை சரிவால் ஏற்பட்ட அழுத்தம் ஆகிய காரணங்களால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் 1,356 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே போல உள்நாட்டு நிறுவனங்களும் இந்தியபங்குச்சந்தையில் இருந்து 139 கோடி பங்குகளை விற்று பணமாக்கியுள்ளன.

இது ஒருபுறமிருக்க கச்சா எண்ணெய்விலை 4% உயர்ந்துள்ளது. அமெரிக்க கச்சா எண்ணெய் இருப்பு குறைவு, ரஷ்ய எண்ணெய் நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல் ஆகியவை காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 85.27 டாலர் என உயர்ந்தது. இதன் காரணமாக பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *