நாளை மறுநாள் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி..!
பிரதமர் மோடி வருகிற 18-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ (பேரணி) நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இந்த ரோடு ஷோவானது சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நடத்தப்பட உள்ளதாகவும், பேரணியின்போது பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலாது என மாநகர காவல் ஆணையாளர் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் இது தொடர்பாக சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் காவல்துறை அளித்த விளக்கம் அளிக்கையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பிரதமருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவரையும் நுழைவு வாயிலில் நிறுத்தி சோதனை செய்யப்படும். ஆனால் சாலையில் 4 கிமீ. தூரத்திற்கு பேரணி நடக்கும்போது ஒவ்வொரு தனிநபரையும் சோதனை செய்வது கடினமானது என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரணிக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஜெ.ரமேஷ் குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி , கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.