படுத்தவுடன் பட்டென தூங்க வேண்டுமா? கவலைய விடுங்க..‘இதை’ பண்ணுங்க..

இரவில் எப்படி புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வருவதில்லையா? இதனால் காலையில் எழுந்தாலே மிகவும் சோர்வான உணர்வுடன் இருக்கிறீர்களா? தற்போதைய இளைஞர்களுக்கு மனநலனிலும் உடல் நலனிலும் அதிக பிரச்சனை வருவதற்கு காரணமாக இருப்பது, தூக்கமின்மைதான் என மருத்துவர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அதிகளவு டிஜிட்டல் சாதனங்களை உபயோகிப்பதாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினாலும் பல இளைஞர்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதனை ஆங்கிலத்தில் Insomnia என்று கூறுவர். இனி, படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம், வாங்க.

தூக்கத்திற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்:

இரவில், தூங்குவதற்காக உங்களை தயார் செய்து கொள்வது, உங்கள் மெத்தையை தயார் செய்து கொள்வது உங்களை சீக்கிரமாக தூக்கத்தில் ஆழ்த்த உதவும். இரவில் பல் துலக்குவது, சரும பராமரிப்பில் ஈடுபடுவது, உங்கள் மெத்தையை உங்களுக்கு சௌகரியமானதாக ஏற்படுத்திக்கொள்வது போன்றவை உங்களை தூக்கத்திற்கு தயார் செய்யும் பழக்கங்களாகும்.

உடல் நலனில் கவனம் தேவை:

உங்கள் உடலை நன்றாக பராமரித்து கொள்வதும், உடல் நலனில் அக்கறை கொள்வதும் நல்ல தூக்கத்திற்கு உதவும். நாள் முழுவதும் வேலை கொடுக்கும் உடலுக்கு இரவில் தூங்க செல்வதற்கு முன்னால் ரிலாக்ஸ் செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இதற்கான சில யோகாசனங்கள் கூட இருக்கின்றன. அவற்றை செய்து, உங்கள் உடலை நிதானப்படுத்தலாம். அப்படி செய்கையில் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கைகளையும், கால்களையும் மசாஜ் செய்வது கூட ஒரு வகை ரிலாக்சேஷன்தான். இதை செய்தால் படுக்கையில் படுத்தவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ப்ராணாயமம்:

மேற்கூறியது போல, நன்றாக தூங்க வைப்பதற்கென சில யோகாசனங்கள் இருக்கின்றன. இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் பலர் மன அழுத்தம் அல்லது மனக்குழப்பம் உடையவர்களாக இருக்கின்றனர். இவற்றை தீர்க்க, இரவில் தினமும் மூச்சுப்பயிற்சியான ப்ராணாயமம் செய்யலாம். இதை செய்ய, உங்கள் படுக்கையில் அமர்ந்து கொண்டு ஒரு நாசியை மூடி இன்னொரு நாசி வழியாக மூச்சை இழுத்து விட வேண்டும். ஒரு நாசியில் 4 வினாடிகள் மூச்சை இழுத்து பிடித்தப்பிறகு மூச்சை விட வேண்டும். இப்படியே 6,7,10 வினாடிகள் வரை மூச்சை பிடித்து ப்ராணாயாமம் செய்யலாம்.

மனதை சுத்தப்படுத்துங்கள்:

தூக்கமின்மை குறித்து பேசும் சில மருத்துவர்கள், நம் மனதில் குழப்பங்கள் மேலோங்கி இருந்தால் இரவில் தூங்குவது எளிதாக இருக்காது என கூறுகின்றனர். எனவே, உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம், அல்லது மனக்கசப்பு இருந்தால் அதை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதிவிடுங்கள். இது பதற்றம், மனசோர்வு ஆகியவற்றை குறைக்க உதவும்.

போன் உபயோகம்..

இரவில் உறங்க செல்லும் முன்பு செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவும். இது, உங்களுக்கு தூங்குவதற்கு உதவும் ஹார்மோன்களை பாதிக்கலாம். இதனாலேயே மருத்துவர்கள் பலர் இரவில் செல்போன் பயன்பாட்டினை குறைக்க சொல்கின்றனர்.

டயட்:

நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அவை நமது தூக்கத்தையும் பாதிக்குமாம். எனவே இரவில் லைட்-வெயிட் உணவாக எடுத்துக்காெள்வது சிறந்தது. துரித உணவுகள், காரமான உணவுகள் வயிற்றுக்கு உபாதையை ஏற்படுத்தும். இதனால் இரவில் தூங்குவது கடினமாகலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *