சரவண பவன் டூ ராமேஸ்வரம் கபே: இந்தியாவில் சர்ச்சைகளில் சிக்கிய முக்கிய உணவகங்கள்

நெய் பொடி தோசை, கார்லிக் ரோஸ்ட் தோசை போன்ற சுவையான உணவுகளுக்குப் பேர்போன பெங்களூர் ராமேஸ்வரம் கபேயில் சில நாட்களுக்கு முன்பாக திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவின் இந்திரா நகரில் உள்ள ராமேஸ்வரம் கபே கிளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தக் கடை தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் அதன் ருசியான உணவுப் பொருட்கள் மக்கள் ஆதரவைப் பெற்றதால் பிரபலமானது.

குண்டு வெடித்த சமயத்தில் பதிவான சிசி டிவி கேமரா காட்சியில் குண்டுவைத்த நபர் கடைக்கு வந்து இட்லி ஆர்டர் செய்துள்ளார், பின்னர் அவர் உட்கார்ந்திருந்த டேபிளில் ஒரு பையை வைத்துவிட்டு போனில் பேசியபடி வெளியே கிளம்பிச் சென்றுவிட்டார்.

சிறிதுநேரத்தில் அந்த பையில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. டைமர் மூலம் இந்த வெடிகுண்டு செயல்பட்டுள்ளது. குண்டு வெடித்ததில் அங்கிருந்த 5 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. குண்டு வைத்தவர் பற்றி தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமானம் தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று இந்தியாவில் பிரபலமான பல்வேறு உணவகங்கள் பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளன.

சரவண பவன்: தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் 39 கிளைகளை சரவண பவன் உணவகம் கொண்டுள்ளது. இதன் உரிமையாளர் ராஜகோபால் தனது ஊழியர் மகள் ஜீவஜோதியை மணந்து கொண்டால் தொழில் வெற்றிகரமாக நடக்கும் என்று யாரோ ஒரு ஜோதிடர் சொன்னதைக் கேட்டு ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ்குமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தார். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 2009 ஆம் ஆண்டில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

லாஃபோரெஸ்ட்டா கபே: கூர்கான் செக்டார் 90 இல் உள்ள லாஃபோரஸ்ட்டா கபேயில் அண்மையில் 5 பேர் உணவருந்த சென்றுள்ளனர். அவர்களுக்குத் தவறுதலாக டிரை ஐஸ் பரிமாறப்பட்டுள்ளது. அதைச் சாப்பிட்ட 5 பேரும் ரத்த வாந்தி எடுத்துள்ளனர்.

வாய், தொண்டை, கைகளின் தோல் கருகியது. இதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கபேயின் மேனேஜர் கைது செய்யப்பட்டார். அதன் உரிமையாளர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார். இதைத் தொடர்ந்து கபே மூடப்பட்டு கிடக்கிறது.

அக்குயிலா: 2021 ஆம் ஆண்டின் போது இந்த உணவகத்துக்கு இந்தியப் பாரம்பரிய ஆடையான சேலையை உடுத்திக் கொண்டு வந்த பெண்ணுக்கு உணவகத்துக்கு உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டது.

அவர் கேஷுவல் ஆடை அணிந்து வராததால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. புகாருக்குப் பின்னர் விசாரணையில் இந்த உணவகம் லைசென்ஸ் இல்லாமல் சட்டவிரோதமாக நடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்காக அந்த உணவகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த உணவகம் மூடப்பட்டது.

ஹால்திராம்ஸ்: 2010 ஆம் ஆண்டில் ஹால்திராம்ஸின் இணை உரிமையாளரான பிரபு குமார் அகர்வால் ஒரு டீக்கடைக்காரரைக் கொன்றதாக கைது செய்யப்பட்டார். தனது உணவகத்துக்கு முன்பாக டீக்கடை வைத்திருந்த நபர் அதை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு மறுத்ததால் கடையின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லியோபோல்டு கபே: மும்பையில் உள்ள பழமையான கபேக்களில் லியோபோல்டு கபேயும் ஒன்றாகும். மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலின்போது இந்த லியோபோல்டு கபேயும் தாக்குதலுக்கு ஆளானது. 1871 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த உணவகம் இந்திய மற்றும் ஐரோப்பிய உணவுகளின் கலவைக்குப் பேர் போனதாகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *