ஒரு பந்துக்கு ஒரு ரன்.. மும்பை இந்தியன்ஸ் செய்த வேலை.. கடுப்பான நீதா அம்பானி.. பறிபோன கோப்பை
2024 மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான தகுதி நீக்கப் போட்டியில் வெற்றி பெற எளிதான வாய்ப்பு கிடைத்தும் கடைசி 3 ஓவர்களில் மோசமாக செயல்பட்டு தோல்வி அடைந்தது மும்பை இந்தியன்ஸ்.
இதை அடுத்து அதிருப்தி அடைந்த மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரான நீதா அம்பானி கடைசி நிமிடங்களில் போட்டியை காணாமல் வேறு பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தார். கடந்த ஆண்டு கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி இந்த முறை தகுதி நீக்க போட்டியுடன் வெளியேறியது.
முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு கட்டத்தில் 49 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. எல்லிஸ் பெர்ரி அபாரமாக ஆடி 50 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அணியை கரை சேர்த்தார். அதை அடுத்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
அடுத்து சேஸிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி ஆட்டம் ஆடாமல் நிதானமாக இலக்கை நோக்கி சென்றது. 17 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழந்து 116 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமேலியா கேர் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியும் வெற்றி பெற்று விடும் என்றே அனைவரும் எண்ணினர்.
ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்ததோடு ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறியது மும்பை இந்தியன்ஸ். 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
கடைசி 3 ஓவர்களில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவில் தான் ரன் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அப்படி எளிதான சூழ்நிலை இருந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்ததால் கடும் அதிருப்தி அடைந்தார் நீதா அம்பானி. போட்டியை காண வந்த அவர் கடைசி 3 ஓவர்களில் போட்டியை பார்க்காமல் அமர்ந்து இருந்தார்.