ஐபிஎல் தொடருக்கு ஆப்பு? அவசர அவசரமாக துபாய் சென்ற பிசிசிஐ அதிகாரிகள்.. அணிகள் கலக்கம்
2024 ஐபிஎல் தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடைபெறுவதே சந்தேகம் தான் என்ற தகவல் பரவி வருகிறது. பிசிசிஐ அதிகாரிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளனர். அங்கே உள்ள துபாய், ஷார்ஜா போன்ற நகரங்களில் ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியை நடத்துவது குறித்து அங்குள்ள் கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். ஏன் இந்த திடீர் குழப்பம்?
2024 நாடாளுமன்ற தேர்தல் தான் இந்த சிக்கலான நிலைக்கு காரணம். இன்று (மார்ச் 13) மதியம் இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளது. கடந்த இரண்டு முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களின் போதும் பல கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
அதே போல இந்த முறையும் பல கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டால், எந்தெந்த தேதிகளில் எல்லாம் வாக்கெடுப்பு நடக்குமோ, அந்த தேதிகளில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம். தற்போது பிசிசிஐ, ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வார தேதிகளை மட்டுமே அறிவித்து இருக்கிறது.
ஏப்ரல் 7 க்கு பிறகான ஐபிஎல் போட்டிகளின் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. அந்த சமயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்பதால் ஏப்ரல் 7 முதல் மே மாதம் முதல் வாரம் வரை ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் சிரமம் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் ஐக்கிய அரபு அமீரகம் சென்று அங்கு 2024 ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த தகவலை முன் கூட்டியே அறிந்த ஐபிஎல் அணிகள் கலக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் தொடரை பாதி இந்தியாவிலும், மீதி வேறு நாட்டிலுமாக நடத்தினால் போக்குவரத்து, ஹோட்டல் அறைகள் மற்றும் வீரர்களுக்கான பிற வசதிகள் என செலவு இரண்டு மடங்காக அதிகரிக்கும். மேலும், வெளிநாட்டில் அதிக அளவு ரசிகர்கள் வரவில்லை என்றால் டிக்கெட் வருமானமும் குறையும். இதை எல்லாம் கணக்கு போட்டு ஐபிஎல் அணிகள் கலக்கத்தில் உள்ளன. 2019 ஐபிஎல் தொடர் நாடாளுமன்ற தேர்தலுக்கு நடுவே எந்த பிரச்னையும் இன்றி நடந்தது போல இந்த முறையும் நடக்க வேண்டும் என்பதே ஐபிஎல் அணிகளின் எண்ணமாக உள்ளது.